சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன.11) கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தது தொடர்பாக இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக, அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள, தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த அவையிலே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். “எல்லோருக்கும் எல்லாம்” என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூக நீதியை நாம் வழங்கிட முடியும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி என்னும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். சாதிக் கொடுமையை, சான்றோர்களே தவறு என்று உணர்ந்து கொள்ளச் செய்து, தன் ஓங்கி உலகளந்த கல்வியால், சட்டமும், பொருளாதாரமும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.
» பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்: பேரவையில் இபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
» “அழிவுப் பாதையில் தமிழ்நாடு” - பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் கருத்து
வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் எனக்குக் கிடைத்தவுடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், பாதுகாப்பான குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த 27-12-2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அலுவலர்கள் அக்குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்கள் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், அந்த கிராமத்திலிருந்து இதுபோன்ற நோய்த் தொற்றுடைய நோயாளிகள் வருகை அதிகரித்த நிலையில், அவர்கள் பயன்படுத்தி வரும் குடிநீரைப் பரிசோதனை செய்திட மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதனடிப்படையில், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்தபோது, மனிதக் கழிவுகள் கலந்துள்ளது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழு வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று 26-12-2022 முதல் இன்றுவரையில் அந்தக் கிராமத்திலேயே முகாமிட்டு நோய்த் தடுப்புப் பணிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அந்தக் கிராமத்தில் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், ஒரு மருத்துவ அலுவலர், 3 செவிலியர், 2 மருத்துவமனைப் பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 10 பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றி வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்பின் உதவியோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதோடு, அனைத்து குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதன்மூலமாக நீரேற்றப்பட்டு, நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கை வரப்பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அந்த கிராமத்திலுள்ள 32 வீடுகளுக்கும் 2 இலட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக் குழாய்கள் மற்றும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு, 5-1-2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அதோடு, அங்கு ஒரு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 7 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு தற்போது தினசரி டேங்கர் லாரி மூலம் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. சமூகத்தில் உள்ள இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி மத வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, ‘மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்’ என்ற பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் வார்த்தைகளை மனதிலே கொண்டு, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.
ஆனால், சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவிலே கொள்ளவேண்டும். இவர்களையெல்லாம் தாண்டி, சாதி, இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, நாம் அனைவரும் சம உரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்கிடவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை இரும்புக் கரம் கொண்டு எடுக்கப்படும் என்பதையும் இந்த தருணத்தில் இங்கே கவன ஈர்ப்பு அறிவிப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் தெரிவித்து, இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கின்றேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago