மின்வாரிய 56,000 காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா?-  ராமதாஸ் கேள்வி 

By செய்திப்பிரிவு

சென்னை: மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக ஆட்குறைப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்படி அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடாகும்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பணி ஒதுக்கீட்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மின்வாரிய நிர்வாகம் நேற்று முன்நாள் 9-ஆம் தேதி பேச்சு நடத்தியது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தின் திட்டங்கள் குறித்து கருத்து கேட்டு 19 தொழிற்சங்கங்களுக்கு மின்சார வாரியத்தின் நிதித்துறை இயக்குனர் சுந்தரவதனம் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மொத்தம் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரு யோசனைகள் ஆபத்தானவை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவையான இடங்களில், தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை (Outsourcing) முறையில் ஆட்களைப் பெற்று நியமித்தல், மின்வாரியத்தின் ஊதியச்சுமையை குறைக்கும் வகையில், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்தல் ஆகியவை தான் மின்சார வாரியம் செயல்படுத்தத் துடிக்கும் ஆபத்தான திட்டங்களாகும். இந்த இரு யோசனைகளும் மிகவும் பிற்போக்கானவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மின்சார வாரியத்தின் திட்டத்தை பார்க்கும் போது, அதில் ஏராளமான உபரி பணியிடங்கள் இருப்பது போலவும், அந்த பணியிடங்கள் தேவையற்றவை போலவும், அவற்றைத் தான் அரசு ஒழிக்கப்போவதைப் போலவும் தோன்றும். உண்மையில் மின்வாரியத்தில் மொத்தமுள்ள 1.45 லட்சம் பணியிடங்களில் 56,000 பணியிடங்கள், அதாவது சுமார் 40% பணிகள் காலியாக உள்ளன. இவை கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். அதற்கு பிறகு இன்று வரையிலான 15 மாதங்களில் மின் வாரிய காலியிடங்களின் எண்ணிக்கை 60 ஆயிரம் என்ற நிலையை தாண்டியிருக்க வாய்ப்புள்ளது.

மின்வாரியத்தில் 40% பணிகள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், தொழிற்சங்கங்களாலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம், இப்போது அந்த பணியிடங்களை பயனற்றவையாக காட்டி ஒழிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காலியிடங்கள் இருந்து, அதனால் பிற ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்காமலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமலும் இருந்தால், காலியாக உள்ள பணியிடங்களை பயன்படாத பணியிடங்களாக கருதலாம். ஆனால், காலியாக உள்ள பணியிடங்களால் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, போதிய பணியாளர்கள் இல்லாததால் தான் மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று தமிழக அரசே பலமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, பயனற்றவை என்று கூறி பணியிடங்களை ஒழிக்க நினைப்பது எப்படி சரியாகும்?

அடுத்தபடியாக, நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது மனிதவளத்தை சுரண்டும் செயலாகும். அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்த விதிகளை மாற்றுவதற்காக மனிதவள சீர்திருத்தக்குழுவை அமைத்து அரசாணை எண் 115-ஐ தமிழக அரசு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிட்டது. அதன் முக்கிய அம்சமே குத்தகை முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுப்பது குறித்து பரிந்துரைப்பது பற்றியது தான் என்பதால், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து மனிதவள சீர்திருத்தக்குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்து முதலமைச்சர் ஆணையிட்டார். முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக மின்சார வாரியம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பதற்கு முயல்வது நியாயமற்றது.

எனவே, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது, பணியிடங்களை ரத்து செய்வது ஆகிய திட்டங்களை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்