மேகேதாட்டு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்: காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உறுதி

By செய்திப்பிரிவு

காரைக்கால்: மேகேதாட்டு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் சொல்வதற்கேற்ப செயல்படுவோம் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியுள்ளார்.

காரைக்காலுக்கு வழங்கவேண்டிய காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக, புதுச்சேரியில் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், காரைக்காலுக்கு நேற்று வந்த அவர்கள், காரைக்கால் மாவட்டத்தில் மத்திய நீர்வள ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள 7 ஆறுகளின் நதிநீர் பங்கீடு அளவீட்டு இடங்களை, புதுச்சேரி மாநில எல்லைக்குள் மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

மேலும், காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர், அன்னவாசல் ஆகிய எல்லைப் பகுதிகளில் நண்டலாறு, நாட்டாறு ஆகியவற்றில் நதிநீர் பங்கீடு அளவீட்டு இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர், எஸ்.கே.ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட காரைக்காலுக்கு வரும் ஆறுகளில், இரண்டில் மட்டுமேநீர் அளவீட்டு இடங்கள் உள்ளன. மற்றவை தமிழகப் பகுதிகளில் உள்ளன.

அந்த நிலையங்களை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுசெய்து, அதற்கேற்பபரிந்துரைகள் அளிக்கப்படும். அதன்படி, புதுச்சேரி மாநிலத்துக்கான தண்ணீரின் அளவு இருமாநில எல்லையிலேயே அளவிடப்படும். விவசாயிகளும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு அனுமதி கோரியிருக்கிறது. தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் சொல்வதன் அடிப்படையில் செயல்படுவோம். ஆணையத்தின் கூட்டம் இம்மாதத்தில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் வாஞ்சியாற்றில் நீர் அளவீடு செய்யும் இடத்தை எஸ்.கே.ஹல்தர் பார்வையிட்டார்.

புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, காரைக்கால் கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், தமிழக தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE