பூர்வீகமான ஸ்ரீரங்கத்தில் தடம்பதித்த ஜெயலலிதா: தொகுதி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார்

By அ.வேலுச்சாமி

தனது பூர்வீகமான ஸ்ரீரங்கத்தின் மீது அதீத பிரியம் கொண்ட முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒரே ஒருமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கர்நாடகாவில் பிறந்தவராக இருந்தாலும், அவரது பூர்வீகம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கம்தான். எனவேதான், ஸ்ரீரங்கத்தின் மீது ஜெயலலிதாவுக்கு தனி பிரியம் உண்டு. இதனை பல சமயங்களில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியைக் கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம்தான், எனது பூர்வீகம். எனது சொந்த ஊரில் உங்கள் முன் பேசுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் இந்த பேச்சை அடிப்படையாக வைத்து, அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கருதினர். அந்த நம்பிக்கை மெய்யானது. 1982-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்த ஜெயலலிதா, அதன்பின் சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகே, ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்வு செய்தார். இதன்படி 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக, மார்ச் 24-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா, அன்று மாலையே ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், “ஸ்ரீரங்கம் எனது பூர்வீக ஊராகும். என்னுடைய குடும்ப முன்னோர்கள் இங்குதான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள். எனவே, ஸ்ரீரங்கத்துக்கு நான் வந்து செல்வது, எனது குடும்ப வீட்டுக்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று, இத்தொகுதி மக்கள் 41,488 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்தனர்.

இதன்மூலம் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குக்கிராமங்களுக்கும் அவர் சென்று வந்ததால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஊரெங்கும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அப்போது, குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருவேன் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதன்படி, 19.6.2011 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, ரூ.190 கோடியே 18 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் 13.2.2012 அன்று ரூ.160 கோடியே 21 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கும், 13.9.2012 அன்று ரூ.82 கோடியே 63 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கும், 3.6.2013 அன்று ரூ.1,752 கோடியே 69 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 19.6.2011 முதல், 30.6.2014 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.2,185 கோடியே 71 லட்சம் மதிப்பிலான 5,200 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல, அனைத்துத் துறைகளின் முக்கியத் திட்டங்களும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரத் தொடங்கின. இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி தனித்த அடையாளம் பெற்றது.

எனினும், 30.6.2014 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பேசியபோது, “காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ளதும், ஏழுலகங்கள் என்று பக்தர்களால் நம்பப்படும் ஏழு சுற்று மதில் சுவர்களின் நடுவில் அமைந்துள்ளதுமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய அரசு விழாவில் பங்கேற்று, உங்களையெல்லாம் கண்டு, மீண்டும் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

அதன்பின் ஏற்பட்ட மாற்றங்களால் ஸ்ரீரங்கம் தொகுதி, நட்சத்திர அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை உருவானது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2014 செப்டம்பர் 27-ம் தேதி முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.

தொடர்ந்து, நடைபெற்ற இடைத்தேர்தல், 2016 பொதுத்தேர்தல்களில் அவர் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் இன்றளவும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை:

ஸ்ரீரங்கத்தில் 30.6.2014 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை சொன்னார். அந்த கதை இதோ:

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், ‘கடவுள் இருக்கும் இடத்துக்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?’ என்ற வினா எழுந்தது. உடனே அரச சபையைக் கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையைக் கேட்டார் மன்னர். யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஊருக்கு வெளியில் இருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார். அந்த முனிவரிடம், ‘கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று வினவினார் மன்னர். அதற்கு அந்த முனிவர், ‘கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்’ என்று பதில் அளித்தார். ‘அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?’ என்று கேட்டார் மன்னர். அதற்கு அந்த முனிவர், ‘எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது’ என்றார்.

‘புரியும்படி கூறுங்கள்’ என்று அந்த மன்னர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த முனிவர், ‘துரியோதனன் சபையில் திரவுபதி அவமானப்படுத்தப்பட்ட போது, வைகுண்டவாசா காப்பாற்று என்று திரவுபதி அழைத்தும் கிருஷ்ணர் வரவில்லை. துவாரகை நாயகனே என்னைக் காப்பாற்று என்று திரவுபதி அழைத்தபோதும் கிருஷ்ணர் வரவில்லை.

இதயத்தில் இருப்பவனே என்று கடைசியாக அழைத்தாள் திரவுபதி. உடனே, பகவான் கிருஷ்ணர் தோன்றி திரவுபதியின் மானத்தைக் காத்தார். கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்புக்குத் தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் குரல் கடவுளுக்குக் கேட்கும். உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்’ என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.

கடவுளைப் போலத்தான் மக்களும். அதனால் தான், “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படியானால், மக்களாகிய நீங்கள்தானே மகேசன்? மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இதயங்களிலும் நான் என்றென்றும் குடிகொண்டு இருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்