குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே - மலை ரயில் டீசல் இன்ஜின் சோதனை ஓட்டம்

By செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் பர்னஸ் ஆயிலில் இருந்து டீசலுக்கு மாற்றப்பட்ட இரண்டாவது டீசல் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே, பர்னஸ் ஆயில் மூலமாக மலை ரயில் இயக்கப்படுகிறது. பர்னஸ் ஆயில் மூலமாக இயக்கப்பட்டு வந்த ரயில் இன்ஜின், அதிக அளவில் மாசு ஏற்படுத்துவதால், மாற்றியமைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றியமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஏற்கெனவே, குன்னூர் ரயில்வே பணிமனையில் சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் என்பவரின் முயற்சியால், பர்னஸ் ஆயில் இன்ஜின் டீசல் இன்ஜினாக மாற்றப்பட்டது. இந்த இன்ஜின் மூலமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது 2-வது பர்னஸ் ஆயில் இன்ஜினை, கடந்தஒன்றரை மாதங்களாக மாணிக்கம் தலைமையில் டீசல் இன்ஜினாக மாற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முடிந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை2-வது சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் குன்னூர் வரை 3பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டியுடன் வெற்றிகரமாக வந்து சேர்ந்தது. விரைவில், புதிய இன்ஜினுடன் மலைரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE