சிவகாசி அருகே பட்டாசு ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டல் - மூன்று மாதத்தில் பணிகள் முடியும் என தகவல்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(நீரி) சார்பில் கட்டப்பட உள்ள பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நாக்பூரில் உள்ள நீரி மைய இயக்குனர் அதுல் வைத்யா ஆகியோர் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(நீரி) மற்றும் பட்டாசு உரிமையாளர்கள் இடையே பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த ஆய்வு மையம் அமைக்க கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்நதம் கையெழுத்து ஆனது. இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு ரூ.9 கோடியும். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கம்(டான்பாமா) சார்பில் ரூ.6 கோடி என ரூ.15 கோடி மதிப்பில் வேதிப்பொரும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இந்த மையம் தற்போது தற்காலிகமாக ஆமத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, சிவகாசி அருகே ஆணைக்குட்டம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, டான்பாமா சங்க தலைவர் கணேசன், துணை தலைவர்கள் ராஜரத்தினம், அபிரூபன், பொதுசெயலாளர் பாலாஜி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் புதிய ஆய்வு மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்யபட்டது. இதுகுறித்து நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு கூறுகையில், ‘நாக்பூருக்கு அடுத்து சிவகாசியில் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. இதில் மூலப்பொருட்கள், ராசாயன கலவை, பட்டாசு வெளியிடும் புகை ஆகியவை ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இங்கு சான்றிதழ் பெறப்படும் வேதிப்பொருட்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கபடும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு இல்லாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் உதவியாக இருக்கும். நீரி அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1200 பட்டாசு ஆலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சிவகாசியை சேர்ந்த சுமார் 1000 பட்டாசு ஆலைகள் அடக்கம். இந்த ஆய்வு மையத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் கட்டிட பணி நிறைவடைந்ததும் ஆராய்ச்சி மையம் செயல்பாட்டுக்கு வரும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE