சென்னை அருகே மாடம்பாக்கத்தில் 600 ஏக்கரில் புதிய வளர்ச்சிப் பகுதி: சிஎம்டிஏ புதிய முயற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில், நிலத்திரட்டு (Land Pooling) முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சியை சிஎம்டிஏ மேற்கொண்டு வருவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் உரையில் வெளியிடப்பட்ட தகவல்: "கிராமப்புறப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கட்டமைப்புகளை மேம்படுத்தி, வாழ்வாதாரத் திட்டங்களின் மூலம் வறுமையை அகற்றிடும் முயற்சிகளில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்துக் கிராமப்புரக் குடியிருப்புப் பகுதிகளிலும் சமமான முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடன், ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ இந்த அரசால் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 1,155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,544 ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர உணர்வுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ திட்டத்தை இந்த அரசு மீட்டெடுத்து வருகின்றது. முதற்கட்டமாக, 149 சமத்துவபுரங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொண்ட புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அதேபோல், நகர்ப்புரப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, வரும் நான்கு ஆண்டுகளில் 20,990 கி.மீ. நீளமுள்ள நகர்ப்புர சாலைகள் 9,588 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுமென சென்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்தார்கள். இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

53 இடங்களில் தேங்கியுள்ள பழைய கழிவுகளை (legacy waste) சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, உயிரி-அகழ்ந்தெடுத்தல் (Bio-mining) முறையில் அப்புறப்படுத்தி, நிலங்கள் மீட்டெடுக்கப்படவுள்ளன. இதற்காக, அரசு 122 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை, 369 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பசுமையான பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக, 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 103 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு, உயிர்நீர் இயக்கத்தின் கீழ் (Jal Jeevan Mission) அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நகர்ப்புரப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளுக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் 3,166 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் 1.64 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

நகரங்களின் திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் முறைப்படுத்தவும் ஆறு புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இப்பெரும் நகரத் தொகுப்பின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், சென்னைப் பெருநகரின் எல்லை ஐந்து மடங்காக 5,904 சதுர கி.மீ. அளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்கவும், பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் போக்குவரத்து அமைப்புகளையும், சேவைகளையும் ஒருங்கிணைத்திடவும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (CUMTA) 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இக்குழுமத்திற்கு, இந்த அரசு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இக்குழுமத்தின் முதல் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை, பல்வழிப் போக்குவரத்துத் திட்டம், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

சென்னை பெருநகரின் வேகமான வளர்ச்சி நீடித்து நிலைக்கத்தக்கதாக இருக்க வேண்டுமெனில், இந்தப் பெருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி அவசியம் என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இந்த வகையில், சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில், நிலத்திரட்டு (Land Pooling) முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்களைப் பெற்றுத் திரட்டி, திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவற்றை நில வகைப்பாடு செய்து, நில உரிமையாளர்களுக்கு பங்கீடு செய்து வழங்கி, புறநகர் வளர்ச்சிக்கு வித்திடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நில உரிமையாளர்கள் மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ள இப்பணிகள் விரைவில் நிறைவுறும். இதன் அடுத்தகட்டமாக, இதே நிலத்திரட்டு முறையைப் பின்பற்றி, கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். இச்சாலையும் நான்குவழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகரப் பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம் விளங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்