“தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் இடையூறு செய்கிறது மத்திய அரசு” - முத்தரசன்

By செய்திப்பிரிவு

சென்னை: "பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறு செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆளுநர் வெளிநடப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தேசிய கீதத்தைக்கூட மதிப்பதற்கு தயாராக இல்லாத ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார். ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது என்பது தமிழக முதல்வரை அல்ல, தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார். தேசிய கீதத்தை அவமதிக்கிறார்" என்றார்.

புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் பதவி பிரச்சினைக்குரியதாக இருந்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாகும். ஆளுநர் என்பது ஒரு பதவி கிடையாது. இதெல்லாம் ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இது. எனவே இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இருக்கிறது. ஆளுநர் பதவிக் கூடாது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிலை. ஆனால் இன்றைக்கு இந்தப் பதவி இருக்கிறது.

இப்போதிருக்கிற ஆளுநர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், பாஜக எங்கெல்லாம் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அந்த மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறு செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. அதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இதனிடையே, அவர் வெளியிட்ட அறிக்கையில், “நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் இன்று (09.01.2023) உரையாற்றியுள்ளார். அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் ஆளுநர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் வாசிக்க கடமைப்பட்டவர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வருவது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையிதான் இன்று (09.01.2023) ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.

அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு “திராவிட மாடல் ஆட்சி” என்று உரிமை கொண்டாடுவதை நிராகரித்தும் அவமதித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதை ஏற்க மறுத்துள்ள ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக ஆளுநரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து, கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேராபத்தை எதிர் கொண்டு முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE