'தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்'  - பொங்கல் வாழ்த்து கூறி உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை செயலகத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

உரையைத் தொடங்கியவுடன் "தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்" என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE