நிரந்தர பணி கோரி விரைவில் கோட்டை முற்றுகை: ஒப்பந்த செவிலியர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நிரந்தர பணி கோரி அடுத்தகட்டமாக கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிச. 31-ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்து விட்டதாக தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பணி பாதுகாப்பு, நிரந்தர பணிகோரியும் கடந்த 1-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதனை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சருடன் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

இந்நிலையில், எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் விஜயலட்சுமி, துணைத் தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், துணைச் செயலாளர் மதியரசு, இணைச் செயலாளர் பெர்ஜினோ ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று காலத்தில் நியமிக்கப்பட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனவே, மீதமுள்ள 2,742 பேர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையாக பின்பற்றப்பட்டுள்ளது என்பதை சுகாதாரத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், தற்போது இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்கின்றனர். இடஒதுக்கீடு முறை முறையாகப் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை ஏற்க மறுக்கின்றனர். தமிழகம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில் 2,472 பேரையும், ஏற்கெனவே நீக்கப்பட்ட 810 பேரையும் நியமிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE