ஈரோட்டில் பனிப்பொழிவுடன் கூடிய குளிர் - பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவுடன், குளிரான தட்ப வெப்ப நிலை நிலவி வருவதால், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரை நீடிக்கிறது. தாளவாடி, பர்கூர், ஆசனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் தொடங்கி காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால், வாகனங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல இரவில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப் பொழிவு, குளிர் காரணமாக பருவகாலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இத்தகைய பாதிப்பு கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: பருவ நிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க, பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலான உடைகள், காது, மூக்குக்கு கவசம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும்.

குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூடான உணவுகளை எடுப்பதோடு, மசாலா கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக காய்ச்சல் இருப்பின் மருத்துவர் ஆலோசனையின்பேரில் ரத்த பரிசோதனை மேற்கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE