கோவை, பல்லடம் சாலையை இணைக்கும் புதிய சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொள்ளாச்சி உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டாக்டர் பத்மபூஷன் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.8) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருந்து உங்களோடு நான் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வோடுதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புதலும் தந்தேன். ஆனால் நாளைய தினம் சட்டமன்றம் கூடுகிறது.

கவர்னர் உரையோடு தொடங்குகிற சட்டமன்றம். எனவே, அதற்கான பணிகளில், நான் ஈடுபட வேண்டிய அவசியத்தின் காரணமாக, தொடர்ந்து முழுமையாக இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகி முன்கூட்டியே பேசிவிட்டு, அதுவும் விரைவாக பேசிவிட்டு, விரைவாக செல்லவேண்டும் என்ற அந்த உணர்வோடு வந்திருக்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் அனுமதி தரவேண்டும் என்று உங்களை அன்போடு நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கொங்குநாடு அறக்கட்டளையின் சார்பில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை எண்ணி, எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். பெரியார் என்றால் தந்தை பெரியாரையும், பேரறிஞர் என்றால் அண்ணாவையும், பெருந்தலைவர் என்றால் காமராசர் அவர்களையும், முத்தமிழறிஞர் என்றால் கருணாநிதியையும் குறிப்பதைப் போல அருட்செல்வர் என்றால், அது பொள்ளாச்சி மகாலிங்கத்தை தான் குறிக்கும் என்கிற அளவுக்கு, அவர் சிறப்புக்குரியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளன்று நடந்த வள்ளலார் விழாவில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று உடல் நலிவுற்று, மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் அவர் மரணம் அடைந்தார். இதனைக் கேள்விப்பட்ட கருணாநிதி மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார். அப்போது தலைவருக்கு உடல்நலமில்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். உடனடியாக என்னை அழைத்து, காவேரி மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்த வேண்டுமென்று எனக்கு கட்டளையிட்டார். நானும் உடனடியாக சென்று அஞ்சலி செலுத்தினேன். பின்னர் கருணாநிதியை சந்தித்து, இந்த தகவலை விளக்கமாக நான் சொன்னேன். அப்போது கருணாநிதி தனக்கும், அருட்செல்வருக்கும் இருந்த நட்பைப் பற்றி மிக விளக்கமாக பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் கிண்டியில் உள்ள ஏ.ஆர்.சி.கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள். அதுதான் சக்தி சுகர்ஸ், ஏ.பி.டி. அலுவலகமாக இருக்கிறது. 1969-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சாலை ஒன்றைத் திறப்பதற்காக முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் தேதி வாங்கி இருக்கிறார்கள். அதை பொள்ளாச்சி மகாலிங்கம் தான் அந்தத் தேதியை பெற்றிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், கருணாநிதியை அழைக்கலாமா? என்று அந்தக் காலத்தில் விவாதமே நடந்திருக்கிறது. ஏனென்றால் காங்கிரசை வீழ்த்திவிட்டுத்தான் அப்போது திமுக 1967-இல் ஆட்சிக்கு வந்தது. இப்படி அவதூறு கிளப்பியவர்கள் மீது அருட்செல்வர் வழக்கும் போட்டிருக்கிறார். எப்படி கருணாநிதியை அழைக்கலாம்? என்று அந்தக் காலத்தில் விசாரணையே நடந்திருக்கிறது. அதில் தன்னுடைய தரப்பு வாதங்களை எல்லாம் முறையாகக் கேட்கவில்லை என்கிற வருத்தத்தோடு அரசியலை விட்டே அருட்செல்வர் விலகி இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் தெரிந்துதான், விழா அமைப்பினர் இந்த நூற்றாண்டுக்கு என்னை இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்தார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஆப்பக்கூடல் விழாவில் ஒரு பெரிய விபத்து ஒன்றும் ஏற்பட்டுள்ளது.

பிரமாண்டமான விழா நடந்து கொண்டிருந்தபோது, புயல் அடித்திருக்கிறது. மழை கொட்டியிருக்கிறது. அதன் காரணமாக, பந்தலே சரிந்துவிட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விட்டது. மேடையில் முதல்வர் கருணாநிதி மற்றும் சில அமைச்சர்கள், இன்னும் சில நான்கைந்து பேர்கள் இருக்கிறார்கள். கருணாநிதி, அன்றைக்கு ஈரோடு சின்னச்சாமி அப்படியே தூக்கிக் கொண்டு மேடையை விட்டு இறக்க முயற்சிக்கிறார்.

ஒரே இருட்டாக இருந்த காரணத்தால் அங்கிருந்து ஒரு காரை கொண்டு வரச்சொல்லி, அந்த காரை ஸ்டார்ட் செய்து, அதிலிருந்த லைட் அடிக்க சொல்லி, அந்த வெளிச்சத்தில்தான் அனைவரும் மேடையிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார்கள். எல்லோரும் கீழே வந்தபிறகு அருட்செல்வரை மட்டும் காணவில்லையாம். மேடையில் இருந்த மேசைக்கடியில் அவர் மாட்டிக் கொண்டாராம். பின்னர் தலைவரிடம் வந்து, 'இப்படி ஆகிவிட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னாராம். அந்தளவுக்கு மனிதப்பண்பில் சிறந்தவர் என்று கருணாநிதி பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.

கொங்கு வேளாளர் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதனை ஏற்றுக்கொண்டு கருணாநிதி தான் அதற்கான அரசாணையை வெளியிட்டார்கள். அப்போது கருணாநிதிக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழாவை நடத்துவதில் முன்னின்றவர் அருட்செல்வர். அதனால்தான் 'எல்லாக் காலங்களிலும் என் மீது மாறாத அன்பைப் பொழிந்தவர்' என்று கருணாநி தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

அவரிடம் ஆன்மீக அருள் மட்டுமல்ல, செல்வமும் இருந்தது. அத்தகைய செல்வத்தை, அறநெறிக்கும், அறத் தொண்டுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பயன்படுத்தினார் நம்முடைய பொள்ளாச்சி மகாலிங்கம் . அதனால்தான் அருட்செல்வர் என்பது அவரது பட்டப் பெயராக மட்டும் இல்லாமல், பண்புப் பெயராக அமைந்திருந்தது. 100 ஆண்டுகள் கழித்தும் அவரை நினைக்கிறோம், வாழ்த்துகிறோம், போற்றுகிறோம் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய பணிகளுக்காக நமது நன்றியின் அடையாளமாகவே இதனை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு நூற்றாண்டு விழாவை இவ்வளவு பிரமாண்டமாக நடத்துவார்கள், எல்லோரும் பாராட்டிப் போற்றுவார்கள் என்பதற்காக அருட்செல்வர் அவர்கள் அப்படிச் செயல்பட்டவர் அல்ல. அவரது இயல்பே அப்படித்தான் அமைந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டவர் மட்டுமல்ல - வடமாநிலங்களுக்குக் கொண்டு சென்று இலவசமாக பள்ளி, கல்வி நிலையங்களில் வழங்கியவர் அருட்செல்வர். திருமந்திரம், பெரியபுராணம், திருவருட்பா ஆகிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு லட்சக்கணக்கான பணத்தை வழங்கியவர் அருட்செல்வர்.

உரைவேந்தர் என்று போற்றப்பட்ட ஒளவை துரைசாமி போன்ற பெரும் தமிழறிஞர்களைத் தனது சொந்த செலவில் தங்க வைத்து, இலக்கியங்களுக்கான உரைகளை எழுதி, அதனை அச்சிடுவதற்கு பணமும் கொடுத்து, அப்படி அச்சிட்ட புத்தகங்களை, மொத்தமாக தானே வாங்கி, இலவசமாகக் கொடுத்தவர் நம்முடைய அருட்செல்வர். எனவே அவரை அருட்செல்வர் - என்பதோடு சேர்த்து தமிழ்ச்செல்வர் என்றுகூட அழைக்கலாம்.

இப்படி எத்தனை பேர் தமிழகத்தில் இருந்திருக்க முடியும்? விரல் விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர்கள்தான் இத்தகைய தமிழ்த் தொண்டை ஆற்றி இருக்கிறார்கள். அருட்செல்வரைப் போல பலரும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவரது தந்தை நாச்சிமுத்து மாட்டு வண்டிகளில் தொழில் தொடங்கினார். இவர் கார்கள், லாரிகள், பேருந்துகள் என தொழிலை வளர்த்தார். ஒரு தொழில் அல்ல, பல்வேறு தொழில்களை ஒரே நேரத்தில் செய்தார்.

46க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். வேளாண்மை மாத இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி இருக்கிறார். ஓம் சக்தி இதழை நடத்தினார். தமிழ் எழுத்துகளை ஒலிவடிவில் உச்சரிப்பதற்கான தொழில்நுட்பம் உருவாக்குவதில் கவனம் செலுத்தி இருக்கிறார். இந்திய நதிகளை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டம் வரைந்து அதை வேளாண் பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு போய்க்காட்டி "இந்த ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டு Ph.D பட்டம் தருவீர்களா?" என்று கேட்டவர் அவர். அந்தளவுக்கு அறிவாற்றல் கொண்டவர். இத்தகைய பன்முக ஆற்றலைக் கொண்டவர் அருட்செல்வர் அவர்கள்.

தமிழ்நாட்டின் தொழில் துறையாக இருந்தாலும், ஆன்மீகத் துறையாக இருந்தாலும், அரசியல் துறையாக இருந்தாலும், இலக்கியத் துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், சமூக சேவையாக இருந்தாலும், பதிப்புத் துறையாக இருந்தாலும், அனைத்திலும் முத்திரை பதித்த பல்துறை ஆற்றலாளர்தான் நம்முடைய அருட்செல்வர். 1952 முதல் 1967 வரை மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தார்.

அப்படியே அரசியல் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தொழில், ஆன்மீகம், இலக்கியம் என்று தனது பாதையை அவர் மாற்றிக் கொண்டார். தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் தொண்டை, தேர்தலில் பங்கெடுக்காமலேயே அருட்செல்வர் செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய பணிக்கு மகாத்மா காந்தியடிகள் - அருட்பிரகாச வள்ளலார் ஆகிய இருவரையும் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, அவர் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.

காந்தியடிகளும், அருட்பிரகாச வள்ளலாரும் அவரது இரண்டு கண்களாக இருந்திருக்கிறார்கள். காந்தியடிகள், வள்ளலார் விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் தவறாமல் நடத்தி வந்தார். "நான் காந்தியினுடைய சீடன்" என்று சொல்லிக் கொள்வதில் அவர் பெருமை அடைந்தார். காந்தியாரின் பிறந்தநாளில் அவரது சீடரான மகாலிங்கம் மறைந்தார்.

காந்தியத்தின் எளிமையை அதிகம் வலியுறுத்தி வந்தார். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வந்தார். ''இராமலிங்க வள்ளலாரைப் போன்ற மனிதத் தன்மையுடனும், காந்தியைப் போலக் கொள்கைப் பிடிப்புடனும் வாழ வேண்டும்" என்பதை இன்றைய தலைமுறைக்குத் தொடர்ந்து அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

வள்ளலார் போற்றிய மனிதத் தன்மையும், காந்தியின் மதநல்லிணக்கமும்தான் இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிகத் தேவைப்படுகிறது. அவரது ஆன்மீகம் என்பது மதநல்லிணக்க ஆன்மீகமாக - அவரது சமய நெறி என்பது சமரச சுத்த சன்மார்க்க நெறியாக எப்போதும் இருந்தது. இத்தகைய நெறிகளே இன்று தேவையாக இருக்கின்றன.

இங்கு ஒரு கோரிக்கையை என்னிடத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை நான் படித்துப் பார்த்தேன். எனவே அதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய பொள்ளாச்சி மண் தந்த மாமனிதராக, அருட்செல்வர் நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் பொள்ளாச்சி உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர் சூட்டப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு இந்த விழாவில், இந்த மேடையில் நான் அறிவிக்கிறேன்.

சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் - ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகநீதிச் சமுதாயத்தை உருவாக்குவதே அருட்செல்வருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதைச் சொல்லி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்