இளைய தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் - இலக்கியத் திருவிழாவில் முதல்வர் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொது நூலகத்துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இலக்கியத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இலக்கியத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 108 புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

திமுகவின் ஆட்சி எப்போதும் தமிழ் ஆட்சிக் காலம்தான். தமிழரின் நிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது, தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றது, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கியது என தமிழர் மேம்பாட்டுக்கான ஏராளமான பணிகளை திமுக நிறைவேற்றியுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது இலக்கியத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழின் செழுமையை, வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கற்பிக்கும் புத்தகங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்க்க வேண்டும். அதற்காகவே இத்தகைய இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறோம். இன்றைய இளைய தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இலக்கியம்தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும்.

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் சிறந்த தமிழ்ப் படைப்புகள் உலகின் பல்வேறு மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

சிறு வயதிலிருந்தே மாணவர்களிடம் தமிழ் மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வத்தை உருவாக்க, இத்தகைய நிகழ்ச்சிகள் உறுதுணையாக அமையும். புத்தகக் கண்காட்சிகளைப்போல, இலக்கியத் திருவிழாக்களும் மாவட்டந்தோறும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றுப் பேசும்போது, "தமிழ் என்ற உணர்வே நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. சென்னை இலக்கியத் திருவிழா, படைப்பாற்றல் திறன்மிக்க இளைஞர்கள், மாணவர்களைச் செழுமைப்படுத்தும்’’ என்றார்.

விழாவில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநர் இரா.கஜலட்சுமி, எழுத்தாளர்கள் பால் சக்காரியா, பவா செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், கல்லூரி மாணவர்களுக்கானப் பயிலரங்கம், சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம் என 4 அரங்குகளில், 100-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்துகின்றனர்.

முதல்நாளில் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் பேசினர். தொடர்ந்து, தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலக்கியத் திருவிழா நாளை வரை (ஜன. 8) நடைபெற உள்ளது.

`இந்து தமிழ் திசை' நூல் வெளியீடு: இந்த நிகழ்வில் முதல்வர் வெளியிட்ட 108 நூல்களில் ஒன்றான ‘ஏ கிராண்ட் தமிழ் ட்ரீம்’ (A Grand Tamil Dream) என்ற ஆங்கிலப் புத்தகம், `இந்து தமிழ் திசை' நாளிதழின் தமிழ் திசைப் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற புத்தகத்தின் மொழி பெயர்ப்பாகும். வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. இதை மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போதும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை பாராட்டிப் பேசினார்.

புத்தகக் காட்சி தொடக்கம்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46-வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, பல்வேறு விருதுகளை வழங்கினார்.

‘ஏ கிராண்ட் தமிழ் ட்ரீம்’ (A Grand Tamil Dream)

`இந்து தமிழ் திசை' நாளிதழின் `தமிழ் திசைப் பதிப்பகம்' சார்பில் அறிஞர் அண்ணா பற்றி வெளியிடப்பட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ எனும் தமிழ்ப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஏ கிராண்ட் தமிழ் ட்ரீம்’ (A Grand Tamil Dream) நூலின் விலை ரூ.850. இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15-ம் சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-35048001.

நூலை ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications. கூடுதல் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402. இந்த நூலை சென்னை புத்தகக் காட்சியில் `இந்து தமிழ் திசை' நாளிதழ் அரங்கில் (எண்: 505, 506) 20 சதவீத சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அருகில் உள்ள முன்னணிக் கடைகளிலும் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்