இறைபக்தி இல்லாதவர்களை கோயில்களில் அறங்காவலராக நியமிக்க அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: இறைபக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும், அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க இன்னும் ஓராண்டு அவகாசம் தேவை என்றும், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் 560 கோயில்களுக்கு தமிழக அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என்றும் அறநிலையத் துறை தெரிவித்திருந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், அரசியல் சார்பற்றவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது, இது தொடர்பான விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா, இல்லையா என்ற கேள்வி இடம்பெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியையும் சேர்க்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, "அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது ஏன்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அறநிலையத் துறை சார்பில், கடந்த விசாரணையின்போது, தெய்வ பக்தி கொண்டவர், அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என இந்த நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததால், அந்த கேள்வி இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கோபமடைந்த நீதிபதிகள், "இறை பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தனர்.

பின்னர், அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு வலியுறுத்தினர்.

மேலும், அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான குழுக்களின் நியமனம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்