`தமிழ்நாடு’ குறித்த ஆளுநரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு’ என்று அழைப்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: அதிமுகவினர் அண்ணா வழியில் வந்தவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரிலேயே அண்ணா இருக்கிறார். தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என 1963-ம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் அண்ணா. எனவே, அண்ணாவின் கருத்துதான் அதிமுகவின் கருத்து.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஆளுநரின் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது. ஆர்எஸ்எஸ் அமைத்துக் கொடுத்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக் கொண்டிருக்கிறார். எல்லை மீறிப் பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சர்ச்சை நாயகனாக உருவெடுத்து வருகிறார்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்எஸ்எஸ் ரவி என்பதே சரியாக இருக்கும். ஜனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட, சனாதனத்துக்கான ஆளுநர் என்பதே சரியாக இருக்கும்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சியை ஆளுநர் முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக, பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதை மாற்ற சொல்வதற்கு ஆளுநர் யார். தமிழ்நாடு வாழ்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE