சேலம் | வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த 8.4 டன் வெள்ளை சர்க்கரை கரும்பாலைகளில் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கரும்பாலைகளில் நடத்திய சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த 8.4 டன் வெள்ளை சர்க்கரையை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பாலைகளில் வெல்லம் உற்பத்தி சுறுசுறுப்படைந்துள்ளது. இந்நிலையில், கரும்பாலைகளில் சர்க்கரையை கலப்படம் செய்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள் கண்ணன், குமரகுருபரன், ரமேஷ் ஆகியோர் சங்ககிரி அருகே தேவூர், சோளக்கவுண்டனூர் பகுதியில் உள்ள வெல்லம் குடோனில் சோதனை நடத்தினர்.

இதில், வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள6 டன் வெள்ளை சர்க்கரை கைப்பற்றப்பட்டு, உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி மற்றும் எடப்பாடி பகுதிகளில் உள்ள 7 கரும்பாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். கன்னந்தேரியில் சின்னமுத்து கரும்பாலையில் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 34 மூட்டை வெள்ளை சர்க்கரை, மயிலாண்டி வலவு சமுத்திரம் பகுதியில் சின்னபையன் ஆலையில் 14 மூட்டை சர்க்கரை என 2,400 கிலோ சர்க்கரை கைப்பற்றப்பட்டு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் கரும்பாலைகளில் 45,250 கிலோ வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தை தடுக்க 130 ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மற்ற ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE