மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: அதிமுக மாணவரணி தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று (ஜன.25) கட்சிரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாணவரணி மாநிலச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஜன.25-ம் தேதி, மாணவரணி சார்பில், தமிழகம் முழுவதும் கட்சிரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு முன்னோடி மக்கள்நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பட்டிதொட்டியெங்கும் சாதனை விளக்கப் பிரச்சாரம் வாயிலாக எடுத்துரைத்து, 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற களப் பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகை கல்லூரிகள், ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களில், மாணவர்களுக்கு அதிமுக அரசு வழங்கிய திட்டங்கள் குறித்து துண்டுப்பிரசுரங்கள் மூலம் தெரிவித்து, அதிக எண்ணிக்கையில் மாணவ,மாணவிகளை கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் மகளிரணி மாநில செயலாளர் பா.வளர்மதி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE