தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியல் - தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேற்றம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய அளவில் தொழில் தொடங்கஉகந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு,இன்று 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

உலகத் தமிழ் வம்சாவளி 9-வதுமாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெ.செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இவ்விழாவில், பல்வேறு சாதனைகள் புரிந்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

இந்த மாநாட்டின் மூலம், தமிழ்சமுதாயம் மேம்படவும், தமிழர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் வழி காணப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், பெரும்தொழிற்சாலைகளுக்குத் துணையாக இருந்து நாட்டின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் பெரும் துணைபுரிந்து வருகின்றன.

மேலும், நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக எம்எஸ்எம்இ துறை விளங்குகிறது. இந்திய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3-வது இடத்துக்கு முன்னேறிஉள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் 5-வது நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசும்போது, ‘‘தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக 106 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ரூ.174 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழகஅரசு வழங்கியது’’ என்றார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘இந்தியாவில் உயர்கல்வி பின்தங்கி உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இது 50 சதவீதமாக உள்ளது. எனவே, கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி, உயர்கல்வியை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ‘தென்னாட்டு அண்ணல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசும்போது, ‘‘அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் பொருத்தமானவன் கிடையாது. அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் எனது பணி. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச அரங்கில் கொண்டு சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மலேசிய நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கே.சரஸ்வதி, இலங்கை முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், இலங்கை முன்னாள் கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்