பழநி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல 50,000 மின் விளக்குகள்: கைகளில் ஒளிரும் கைப்பட்டைகளை அணிவிக்க ஏற்பாடு

By ஆ.நல்லசிவன்

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பாதுகாப்புக்காக வழிநெடுகிலும் 50,000 மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்.5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி முன்கூட்டியே பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.

பக்தர்கள் இரவில் சாலையில் நடந்து வரும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இரவு நேரத்தில் நடந்து செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலையில் நடந்து செல்கின்றனர். இவர்கள் பாதுகாப்பாக செல்வதற்காக மதுரை, திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து பழநிக்கு வரும் வழித்தடங்களில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரங்களில் 50,000 மின்விளக்குகள் (டியூப் லைட்) பொருத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதன்படி, தற்போது திண்டுக்கல் - பழநி, பழநி - உடுமலை, தாராபுரம் சாலைகளில் டியூட் லைட்டுகள் பொருத்தப்பட்டு மாலை 6 முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒளிரச் செய்யப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இரவு 10 மணிக்கு மேல் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல வேண்டாம். தற்காலிக தங்கும் குடில்களில் தங்கி விட்டு காலையில் நடந்து செல்ல அறிவுறுத்தி பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பழநி கோயில் நிர்வாகத்தோடு இணைந்து இரவு மற்றும் அதிகாலையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைகளில் மாட்டிக் கொள்ள ஒளிரும் கைப்பட்டை, ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE