ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தப் போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்,
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவரும் கோவிட் நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பார்வையாளர்களாக 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது மொத்த இருக்கைகளில் பாதி அளவிற்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
- போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- அதேபோல், போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவிட் நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- போட்டியின்போது காளைகளுக்கு எவ்வித துன்புறுத்தலும் ஏற்படக்கூடாது. அதை மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
- போட்டி நடைபெறும் இடம், அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை கண்காணித்து மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
- போட்டி நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்களுடன் முன்அனுமதி பெற்று போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
- போட்டிகள் நடைபெறும் விதத்தை கண்காணிப்புக் குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.