“பாஜக கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” - ஜவாஹிருல்லா விமர்சனம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

பாபநாசம் எம்எல்ஏவும், மனித நேய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும், தொழில் துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்நிலையில், திராவிட இயக்க ஆட்சியினால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாகத் தமிழக ஆளுநர் சமீபத்தில் அவரது மாளிகையில் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இவர், பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டும், அந்த மாளிகையையும் துஷ்பிரயோகம் செய்கிறார். அண்மையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நடந்துகொண்ட முறை கண்டிக்கத்தக்கது.

சுந்தரபெருமாள்கோயிலில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அங்கு, மலர் வணிக வளாகம் விரைவில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை அதன் நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்ட கரும்பு விவசாயிகளின் இன்னல்களை களையத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE