சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முயற்சி: கமல்ஹாசன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் டெல்லியில் கலந்துகொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற மநீம நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.6) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கட்சி நிர்வாகிகளைச் சந்த்தித்து இன்று பேசியதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், எனது ஒரு குரலுக்காக, கட்சியின் அனைவரும் பாரத் ஜோடோ யாத்திரைக்காக டெல்லிக்கு திரண்டு வந்தனர்.

பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. அது கட்சிக்கு அப்பாற்பட்டது. அதேபோல், கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள், அதாவது என் மனதில் இருக்கும் சில திட்டங்கள் குறித்து பேசினோம். சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கொண்டுவந்து நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்" என்றார்.

அப்போது மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்தப் போராட்டம் உங்களுக்கு மறந்து போயிருக்கலாம். எனக்கு மறக்கவில்லை. எனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் அதை நடத்தமுடியாது. ஏனென்றால், அது பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், சென்னையில் நடத்த வேண்டும். நகரத்தில் வசிப்பவர்களுக்கு அதன் அருமையும், பெருமையையும் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE