“மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “மொழியைக் காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கியத் திருவிழா இன்று தொடங்கி 8-ம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவில் மாணவர்களுக்கான பயிலும் அரங்கம், சிறுவர்களுக்கு இலக்கிய அரங்கம், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம் என 4 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாட உள்ளனர். மேலும், தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இந்த விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.6) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 33 சிறார் நூல்கள் உட்பட 100 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "முதலில், கேரளத்தினுடைய மிக முக்கிய படைப்பாளியாக இருக்கக்கூடிய திரு. பால் சக்காரியாவிற்கு என்னுடைய முதற்கண் நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கலையை, கலைக்காக மட்டுமல்ல, கலையை மக்களுக்காக இணைத்து பயன்படுத்தும் அவர், நமது அரசினுடைய முன்னெடுப்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வாழ்த்துகளை நாங்கள் ஊக்கமாக எடுத்துக் கொண்டு நிச்சயமாக, உறுதியாக பணியாற்றுவோம். அதேபோல் எழுத்தாளர், படைப்பாளிகள் இங்கே கூடியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

- என்று புரட்சிக்கவிஞரால் போற்றப்பட்ட நம் தாய்மொழியான தமிழுக்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம்!

அதுவும் தமிழ்நாட்டினுடைய தலைமகனாக விளங்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள இந்த நூற்றாண்டு கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது என்பது மிகமிக பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைவிட வேறு ஒரு பொருத்தமான இடம் நிச்சயமாக அமைய முடியாது.

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நாடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் பங்குபெறக் கூடிய வகையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பெருமையால் மட்டுமல்ல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழன் என்ற அந்த உரிமையால் இந்த விழாவில் பங்கெடுப்பதிலே நான் பெருமைப்படுகிறேன்.

தி.மு.க.-வின் ஆட்சிக்காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது!

நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தான் திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

- என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்குக் காரணமான நம்முடைய தமிழகத்தின் அமைச்சர்களை நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

தனது துறையின் மூலமாக தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு நம்முடைய அமைச்சர் அன்பில் மகேஸ் ஆற்றி வரும் அரும்பணி என்பது நிகழ்காலத்தில் மட்டுமல்ல - எதிர்காலத்திலும் நினைத்து நினைத்து மெச்சத்தக்க பணியாக அமைந்திருக்கிறது என்பதை மனதார நான் பாராட்டுகிறேன். அதேபோல் பொது நூலகத் துறையும் மேம்பாடு அடைந்து வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய மூன்றும் இணைந்து இலக்கிய விழாவை நடத்தி வருகின்றன. நெல்லையில் பொருநை விழா, தஞ்சையில் காவிரி விழா, கோவையில் சிறுவாணி விழா, மதுரையில் வைகை விழா என நடத்தப்பட்டு தலைநகரில் தலைசிறந்த விழாவாக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தலைசிறந்த படைப்பாளிகள் இங்கு உரையாற்ற இருக்கிறீர்கள். இந்த ஐந்து விழாக்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டுத் தமிழ் மாநாடு போல இதனைச் சொல்லலாம்.

இத்தகைய விழாவில் 100 நூல்களை நான் உங்களின் அன்போடு, ஆதரவோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்காக ஒரு விழா என்று இல்லாமல் - 100 புத்தகங்களை வெளியிடும் ஒரு விழாவாக இந்த விழா மிகமிக பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும், தமிழ்வளர்ச்சித் துறையாக இருந்தாலும், செய்தித் துறையாக இருந்தாலும், தமிழ் இணையக் கல்விக் கழகமாக இருந்தாலும் அனைத்துமே மிகப்பெரிய பதிப்பகங்களுடன் போட்டி போடக் கூடிய வகையில் அறிவுக் கருவூலங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான புதிய புதிய புத்தகங்களை நான் பார்க்கிறேன்.

இவை அனைத்தும் தமிழின் பெருமையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய இளைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களாக அமைந்துள்ளன. இதனைத் திட்டமிட்டு செயல்படுத்தி, உருவாக்கி, அச்சிட்டு, விற்பனை செய்யும் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

49 ஆண்டுகளுக்கு முன்பு 1974-ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் அன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் 176 கல்லூரி பாட நூல்களை வெளியிட்டு அன்றைய முதல்வர் கருணாநிதி பேசினார்கள்.

“தமிழைப் படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தமிழைப் படிப்பது என்பது சங்ககால இலக்கியங்களை, காவியங்களை, கவிதைகளை நம் பழங்கால பனுவல்களை படிப்பது, தமிழைப் படிப்பது தேவை.

தமிழில் படிப்பது என்பது வரலாறு படிப்பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப்பது, பல்துறைகளைப் படிப்பது, தமிழைப் படிப்பது தேவை. அதைவிட தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. தமிழ்நாட்டில் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் அது தேவை என்று தமிழ்மொழியில் அறிவுச் செல்வம் பெருகவேண்டியதைப் பற்றி உரையாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எது என்று கேட்டால் இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தலைவர் கருணாநிதி மேலும் ஒன்றை அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்கள்.

''மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்கள்.

இன்றைய தேவை என்பது இதுதான்.

மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்.

இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுக தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.

தீனா மூனா கானா திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று திரைப்பாடலில் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கே. அரசியல் தலைவர் தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. ஆனால் குறளோவியமும், சங்கத்தமிழும் அவர் பெயரை தமிழ் உள்ளவரை சொல்லிக் கொண்டே இருக்கும்.

எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடியில் அமைந்திருக்கக்கூடிய திருவள்ளுவர் சிலையும், காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்றைக்கு இருக்கின்றன.இதை நான் சொல்வதற்குக் காரணம் - மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம்.

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் அனைவர் குறித்தும் நான் சொல்லத் தேவையில்லை. நீங்களே அறிவீர்கள். உலகின் புகழ்பெற்ற புத்தகங்கள் அனைத்தும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. நம்முடைய தமிழ்ப்படைப்புகள், உலகின் பல மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நாம் நடத்தப் போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன.

இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும்.

மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் போவதற்கு முன்னால் மருத்துவரிடம் அனுமதி பெற்று புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார் பேரறிஞர் அண்ணா.

தூக்கு மேடைக்குச் செல்லும் போதும் படித்துக் கொண்டு இருந்தார் மாவீரன் பகத்சிங். வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும்.

புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல,கூடிப் படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழா சிறப்பிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்