அதிமுக பொதுக்குழு வழக்கு | ஜெ. இடத்துக்கு வேறு யாரும் வரக்கூடாது என்பதே அதிமுகவினர் நிலைப்பாடு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பதவிக்கு வேறு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுகவினரின் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதாடப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை 2-வது நாளாக நேற்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித்குமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓராண்டுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தியிருந்தால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கான தேவையே இருந்திருக்காது. அப்போது அதை செய்யாத பழனிசாமி, தற்போது பொதுச் செயலாளர் பதவியை அடைய நினைக்கிறார்.

இதற்காக கடந்த ஜூலை 11-ல் நடத்தப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு பேர் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என விரும்பினால், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்துதான் முடிவெடுக்க முடியும் என கட்சி விதிகளில் உள்ளது.

ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றும், அந்தப் பதவிக்கு ஒருபோதும் தேர்தல் நடத்தப்படாது என்றும் விதிகளில் திருத்தம் கொண்டுவந்த பிறகு, அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே நிர்வாகப் பதவிகள். அவற்றின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கட்சியின் எந்த முடிவையும் இருவரும் இணைந்தே எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்தால் மட்டுமே, அது செல்லத்தக்கது. கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், நிதி நிர்வாகம் என அனைத்திலும் இவர்கள் இருவர் மட்டுமே அதிகாரம் செலுத்த முடியும். இந்தப் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதால், கட்சியின் அடிப்படை விதிகளுடன் தொடர்புடையது.

இதில் மாற்றம் செய்ய முடியாது என்று 2021 டிசம்பரில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் தேர்தல் ஆணையத்துக்கும் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இப்பதவிகளை பொதுக்குழுவின் மூலமாக ரத்து செய்துவிட்டு, புதிதாக இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினாலும் அது செல்லாது. ஆனால், பழனிசாமி எப்படியாவது அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை அடைய வேண்டும் என்பதற்காக தேர்தலை சந்திக்காமல், குறுக்கு வழியில் முயற்சித்து வருகிறார்.

ஜெயலலிதா அதிமுகவுக்கு தாயைப் போன்றவர். அவர் வகித்த பொதுச் செயலாளர் என்ற பதவிக்கோ அல்லது அவருடைய இடத்துக்கோ வேறு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுகவினரின் நிலைப்பாடு. 10 ஆண்டுகள் கட்சியின் தலைமை அலுவலகப் பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமே பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்.

10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி, வேறு எவரும் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனக்கு சாதகமாக பழனிசாமி செயல்பட்டுள்ளார். இந்த அவசர முடிவுகள்தான் கட்சியில் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

ஒரு கோடிக்கு மேல் தொண்டர்கள் உள்ள கட்சியில், வெறும் 2,500 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜன. 6-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள், ஜன. 6-ம் தேதியே அனைத்துத் தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE