புதுவையில் சுருங்கிப் போனது பொங்கல் மஞ்சள் சாகுபடி: அரசின் பொங்கல் பரிசுப் பொருளில் மஞ்சள் குலை சேருமா?

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பொங்கலுக்காக, புதுச்சேரி சுற்று வட்டடார பகுதியான மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், செட்டிப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் 100 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடி செய்வது வழக்கம். மார்கழி மாத இறுதி நாட்களில் மஞ்சள் குலைகளை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த முறை பெரிய அளவிற்கு மஞ்சள் சாகுபடி செய்யப்படவில்லை.

இதனால் இம்முறை மஞ்சள் சாகுபடி 40 ஏக்கருக்கும் கீழ் சரிந்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரி அரசும், வேளாண்துறையும் மஞ்சள் விளைச்சலுக்கு எவ்வித உதவியும், ஆலோசனையும் தருவதில்லை. இதற்கான மானியமும் இல்லை. இதுவே இந்த உற்பத்தி குறைந்ததற்கான காரணம் என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "பொங்கலுக்காகதான் மஞ்சள் பயிரிடுகிறோம். ஆனால் சரியான விலை போவதில்லை. கஷ்டப்பட்டு விளைவித்தாலும் 5 ரூபாய்க்குதான் வியாபாரிகள் கேட்கிறார்கள். விளைந்தாலும், விளையாவிட்டாலும் நஷ்டம். முன்பெல்லாம் ஈரோட்டுக்கு அனுப்புவோம்.

இப்போது அதுவும் நின்று விட்டது. இதனால் இம்முறை பயிரிடும் ஏக்கரை குறைத்து விட்டோம். இதே நிலை தொடர்ந்தால் மஞ்சள் விளைச்சலே புதுச்சேரியில் இருக்காது.

தற்போது ரேஷன் கார்டுக்கு பொங்கல் பொருட்களை அரசு பரிசாக தர உள்ளது. அரசு தரும் பொங்கல் பரிசுடன், மஞ்சள் குலையையும் சேர்த்து தந்தால் இதை பயிரிட்ட விவசாயிகளுக்கு சற்று லாபகரமாக இருக்கும். தொடர்ந்து, அடுத்த முறை பயிரிடும் ஆர்வம் வரும்" என்கின்றனர்.

இதுபற்றி மண்ணாடிப்பட்டு பகுதி விவசாயிகளிடம் கேட்டதற்கு, "இதர பயிருக்கு மானியம் தருகிறார்கள். அதனால் அந்தப் பயிர்களில் இயல்பாகவே ஆர்வம் காட்டி வருகிறோம். இதைத் தவிர்த்து தமிழகப் பகுதியில் பெரிய அளவில் மஞ்சள் சாகுபடி நடைபெறுகிறது. அதற்கான வழிகாட்டுதலும் அங்கு வேளாண் துறையால் வழங்கப்படுகிறது. கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் போன்ற பெரிய சந்தைகளின் நுகர்வு தமிழக விவசாயிகளைச் சார்ந்தே இருக்கிறது. இதெல்லாம் இங்கு மஞ்சள் விளைவிப்பது குறைவதற்கு காரணம்" என்கின்றனர்.

"பொங்கல் சீர் கொடுப்பதற்காக காய்கறிகளுடன் கிழங்குகளை மக்கள் அதிகம் வாங்குவதும் வழக்கம். பொங்கலையொட்டி பயன்படுத்தக்கூடிய கருணை கிழங்கு, சிறு கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பலவகை நாட்டுக் கிழங்குகள் பயிரிடுவோம். கிழங்குகள் பயிரிடுவதையும் தற்போது குறைந்து விட்டோம்.

கிழங்கை விளைவித்தாலும், காட்டு பன்றிகளின் தொல்லை உள்ளது. உற்பத்தி செலவும் அதிகமாக உள்ளது. அதற்கான உரிய விலை போவதில்லை. கிழக்கு வகைகளுக்கு அரசு தரப்பில் ஊக்கத்தொகை, காப்பீட்டுத் தொகை தருவதில்லை" என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE