கோயில் மனைகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்: இரா.முத்தரசன்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் ஆகியவை சார்பில் வழிபாட்டுத் தலங்கள், தர்ம ஸ்தாபனங்கள், மடங்கள், சத்திரங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை சாகுபடி செய்வோர்- குடியிருப்போர் நில உரிமைப் பாதுகாப்பு மாநாடு மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கோயில் மனைகளில் வசிப்போரிடம் வாடகை வசூலிப்பதை ரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே இருந்ததுபோல பகுதி முறையைப் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, ஓராண்டு நெருங்கும் நிலையில், விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும்.

கோயில் மனைகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். கோயில்கள், மடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலங்களில் பாரம்பரியமாக குத்தகை சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்கள், குத்தகைத் தொகை செலுத்தவில்லையெனில், அறநிலையத் துறையே வழக்குகளை நடத்தி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றக்கூடிய நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கே நிலத்தைச் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.21-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கோயில் நிலங்களில் குடியிருப்போரும், குத்தகை விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மாநாட்டில் எம்.பி எம்.செல்வராசு, எம்எல்ஏக்கள் க.மாரிமுத்து, நிவேதா எம்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE