மதுரை - திருப்புத்தூர்- காரைக்குடி புதிய ரயில் வழித்தடம்: மதுரையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை

By என். சன்னாசி

மதுரை: மதுரை- திருப்புத்தூர்- காரைக்குடி புதிய ரயில் வழித்தடம் அமைப்பது உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து மதுரையில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு துறைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு உள்ளது. அது போன்று ரயில்வே துறைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைக்குழு உள்ளது. இக்குழுவின் கூட்டம் மதுரை அழகர்கோவில் ரோட்டிலுள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. நிலைக்குழுத் தலைவர், முன்னாள் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எம்பி தலைமை வகித்தார். புதிய ரயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெறும், அகல ரயில் பாதை, இரட்டை இரயில் பாதை பணிகள், மின் மயமாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குறிப்பாக மதுரை- திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு புதிய வழித்தடம் உட்பட தென்மாவட்டத்திற்கான பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிலுவை திட்டங்கள் பற்றி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர். இதற்கு நிலைக்குழு தலைவர் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌச லேந்திர குமார், பரூக் அப்துல்லா, சதாப்தி ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கௌசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்றார். நாடாளுமன்ற செயலக இயக்குநர் மாயா லிங்கி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்ம நாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதற்கிடையில், நிலைக்குழுவினர் ராமேசுவரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். புதிய பாம்பன் பாலம் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டம் குறித்து ராமேசுவரத்தில் நாளை (ஜன.6) ஆலோசனை நடத்துகின்றனர். இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் அதிகாரிகளுடன் நிலைக் குழுவினருடனும் ஆலோசிக்க இருப்பதாக ரயில்வே அதிகாரிக் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE