பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி தமிழக பாஜகவினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜன.5) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கையில் தேங்காயை ஏந்தியபடி பாஜகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி ஜன.3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 8-ம் தேதி வரை வீடு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது.

வேலூரில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டம்: படம் | வி.எம்.மணிநாதன்

பாஜக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன், தேங்காயையும் சேர்த்து வழங்க கோரி தமிழக பாஜகவின் விவசாய அணி சார்பில் மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் எதிரே கூடிய பாஜக விவசாய அணியைச் சேர்ந்தவர்கள், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்கும் வகையில், தமிழக அரசு தேங்காய் வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கரூரில் தென்னை விவசாயிகளைக் காக்க பொங்கல் பரிசோடு தேங்காயை சேர்க்க வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பாஜக விவசாய அணியினரின் இந்த போராட்டத்திற்கு தடை விதித்த காவல்துறை, பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கவும் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

இதேபோல், கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி தமிழக பாஜகவின் விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE