தமிழக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22ம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இதுவரை அந்த பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. அதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட்டம் வழங்குவது தாமதப்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமாக 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களின் இறுதி பருவத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே அல்லது ஜூன் மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்படும். பட்டமளிப்பு விழாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு அவர்களின் கல்லூரிகள் மூலமாகவே சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், நடப்பாண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. அதன் பாதிப்புகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்களுக்கு தற்காலிகச் சான்றிதழ் வழங்கப்படும். அதன் செல்லுபடியாகும் காலம் அதிகபட்சம் 6 மாதங்கள் தான். கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட தற்காலிக பட்டச்சான்றிதழ் இப்போது காலாவதியாகி விட்டது. அதற்குள் நிலையான பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பட்டமளிப்பு விழாக்கள் இன்னும் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

பொறியியல் பட்டம் பெற்றவர்கள், பிற படிப்புகளில் பட்ட மேற்படிப்பை படித்தவர்களின் இலக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பதாகவே உள்ளது. அதற்கு நிலையான பட்டச்சான்றிதழ் தேவை. அது இன்னும் வழங்கப்படாததால் ஏராளமான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் கை நழுவும் ஆபத்து உள்ளது.

2021 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் தவிர பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள் டிசம்பர் மாதத்திற்குள்ளாக நிறைவடைந்து விட்டன. ஆனால், நடப்பாண்டில் இதுவரை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மட்டும் தான் கடந்த டிசம்பர் 24-ம் தேதி நடைபெற்றது. மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள் எப்போது நடைபெறும்? என்ற வினாவுக்கான விடை அவற்றின் துணைவேந்தர்களுக்கே தெரியவில்லை.

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் மாளிகை இன்னும் அனுமதி அளிக்காததற்கு காரணம் என்ன? என்பது குறித்து ஏராளமான யூகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளாமல் அது குறித்து கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது. அதே நேரத்தில், காரணம் எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களை தாமதப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு ஆளுனர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்