சென்னை: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், இலங்கையில் இருந்து தப்பி உள்ளார். இந்நிலையில் அவர் தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா என தமிழக ‘க்யூ’ பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட் டீஸ் தரப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி, அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததாக கூறப்படுகிறது. துபாயில் பதுங்கி இருந்த அவரை கடந்த 2019-ல் இலங்கை போலீஸார் கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்தனர். அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கஞ்சிபாணி இம்ரான், அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவர் தற்போது இலங்கையில் இல்லை என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
அவர், அண்டை நாடான இந்தியா அல்லது வேறு நாட்டுக்கு தப்பிச்சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு போலீஸார் சந்தேகிக்கின்றனர். இம்ரானை பிடிக்க இந்தியாவின் உதவியையும் இலங்கை அரசு நாடியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுப் பிரிவும் தமிழக அரசை உஷார்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தேடுதல் வேட்டையை தமிழக போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தீவிரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு போலீஸார், ‘க்யூ’ பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘க்யூ’ பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “இலங்கை தலைமன்னாரில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில்தான் ராமேசுவரம் உள்ளது. இந்த தூரத்தை விசைப்படகு மூலம் ஒருமணி நேரத்தில் எளிதாகக் கடந்துவிடலாம். எனவே, இம்ரான் ராமேசுவரத்துக்கு வந்தாரா என அப்பகுதிமக்கள், மீனவர்களிடம் விசாரித்து வருகிறோம்.
மேலும், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்கள், அங்குள்ள மீனவ கிராமப் பகுதிகளிலும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமம் உட்பட அனைத்துபிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றனர். அவர் படகு மூலம் தப்புவதை தடுக்க கடலோர மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் சிஷ்யன்: இலங்கையின் நிழல் உலக தாதாவான அங்கொட லொக்காவின் சிஷ்யனாக இம்ரான் இருந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கொட லொக்கா, சிறையில் இருந்து தப்பி கடந்த 2020 ஜூலை மாதம் கோவையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது கூட்டாளிகள் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவமனையில் இருந்து அங்கொட லொக்காவின் சடலத்தைப் பெற்று அவசர அவசரமாக தகனம் செய்தனர். அதன் பிறகே, இறந்தது இலங்கை அரசால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா என்பது தெரியவந்தது.
கோவை சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில், தனது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது.
அதேபோன்று கஞ்சிபாணி இம்ரானும், போலி அடையாள அட்டைகளை தயாரித்து அதன்மூலம் தமிழகத்தில் மறைந்து வாழ்கிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago