சென்னை: மாணவர்கள் கல்வியுடன் இலக்கியம், விளையாட்டு போன்ற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கிய திருவிழா நாளை தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாடுகின்றனர் மேலும், தமிழ் கலாச்சாரம் சார்ந்த நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இதுதவிர விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 100 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த விழாவை மக்கள் அனைவரும் கண்டு மகிழலாம். மேலும், நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதற்கிடையே விழாவை ஒட்டி கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை உள்ளிட்ட இலக்கியப் போட்டிகள், தமிழில் பிழையின்றி எழுதுதல், சமகால சூழலில் படைப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சிப் பட்டறைகளும் நடத்த முடிவானது.
இதன் தொடக்க விழா சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழ் மொழியின் மரபுகள், கலை, பண்பாட்டுச் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. எழுத்தும், பேச்சும் திராவிட இயக்கத்தின் முக்கிய அங்கமாகும்.
நாடக நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முக திறமையோடு இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பள்ளியில் படிக்கும்போது மற்ற பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுப்பேன். ஆனால், தமிழில் 80 முதல் 90 மதிப்பெண் வரை எடுப்பேன். அதற்கு கருணாநிதியின் எழுத்தும், பேச்சும்தான் காரணம். அவரது எழுத்துக்களை முரசொலி பத்திரிகையில் படித்து வளர்ந்ததால் இயல்பிலேயே தமிழ் ஆர்வம் வந்தது. மாணவர்கள் கல்வியோடு இலக்கியம், விளையாட்டு போன்ற இதர திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இரு நாகரிகங்கள்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ``நாகரிகம் உருவான இடங்களை நதிக்கரை என்பார்கள். ஆனால், சென்னையில் மட்டும்தான் கடற்கரை, நதிக்கரை என இரு நாகரிகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியம் சார்ந்த நூலகங்கள் சென்னையில்தான் உள்ளன.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை நம் தமிழ் மண்ணிலிருந்துதான் எழுத வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது'' என்றார். இந்நிகழ்வின்போது பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத், சென்னை இலக்கியக் கழக நிறுவனர் கே.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago