கூட்டுறவுத் துறை மூலம் பயிர்க்கடன் இலக்கு: அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு மார்ச் 2023-க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நியாயவிலைக் கடைகளில் தமிழக முதல்வரின் ஆணைப்படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 3 நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழினை வழங்கினார்கள்.

பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கத்தினை 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் டோக்கன் விநியோகிக்கும் பணி 03.01.2023 முதல் 08.01.2023 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09.01.2023 அன்று தமிழக முதல்வரால் இத்திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான அனைத்து பொருட்களும் தரமானதாக, சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். நியாயவிலைக் கடைகள் அனைத்தும் சுகாதாரமாகவும், அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் பரிசு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 4,455 நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.10,292 கோடி அளவிற்கும், இந்தாண்டு (டிசம்பர் 2022 வரை) ரூ.10,361 கோடி அளவிற்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2023-க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கு அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE