தருமபுரி பாஜக பொதுக்கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கித் தவித்த அண்ணாமலை: பாகுபாடின்றி பாதுகாப்பு தர காவல்துறைக்கு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரியில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

தருமபுரியில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார். பொதுக் கூட்டத்துக்கு அவர் வந்தபோதும்கூட்டம் முடிந்து புறப்பட்டபோதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் அண்ணாமலையிடம் கைகுலுக்கவும், சால்வை வழங்கவும், செஃல்பி எடுக்கவும், அருகில் நின்று பார்க்கவும் முண்டியடித்தனர். இதனால் அண்ணாமலை கூட்ட நெரிசலில் சிக்கி சில நிமிடங்களுக்கு கடும் சிரமத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கு வழங்க வேண்டிய, பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது: திமுக அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தருமபுரியில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் அவர் சிக்கித் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அங்கு மிகக் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்.

அவர் பங்கேற்கும் கூட்டங்களின்போது பாதுகாப்பை கவனித்துகொள்ள கட்சி சார்பிலேயே தொண்டரணியில் வலிமையான பாதுகாப்பு பிரிவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேநேரம், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளுக்கு கட்சி பாகுபாடின்றி பொது நிகழ்ச்சிகளில் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தீய நோக்கத்துடன் வர வாய்ப்பு: பொதுக் கூட்டத்துக்கு வந்தவர்கள் மாநிலத் தலைவரிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் நெருக்கியடித்தது இக்கட்டான தருணமாக அமைந்துவிட்டது. அதேநேரம், அன்பை காட்ட நெருங்கி வருவோருடன் கலந்து, தீய நோக்கம் கொண்டவர்களும் மாநிலத் தலைவரை நெருங்க வாய்ப்புள்ளது.

எனவே, இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, பொது நிகழ்ச்சிகளின்போது தலைவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்காத வகையில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையும் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சமரசமற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE