குயவர்பாளையம் கோயிலில் ஆகம விதிகளை மீறி கும்பாபிஷேகம் நடக்கிறதா? - சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவை குயவர்பாளையத்தில் செல்வ விநாயகர், ஜெயங் கொண்ட மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செல்வ விநாயகர், ஜெயங் கொண்ட மாரியம்மன், ஜெய மங்களாம்பிகை உடன் அமர் ஜெயங்கொண்டேசுவரர், தட்சிணா மூர்த்தி, அய்யப்பன், பாலமுருகர், துர்க்கை, நாகதேவதை, மதுரை வீரன், நவகிரகங்கள், கொடிமரம், ராஜகோபுரம் அமைப்பு, கருவறை திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

வரும் 27-ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 23-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இந்நிலையில் ஆகம விதிகளை மீறி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அறநிலையத் துறைக்கு கோரிக்கை: இது குறித்து குயவர்பாளையம் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என்ற பெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், ஆகம விதிப்படி சிறப்பாக கால்கோள் விழா நடந்த, லெனின் வீதி, குயவர்பாளையம் ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் முழங்கி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் அம்பாளுக்கு ஏற்புடையதாக இருக்காது. இது தெய்வ குற்றமாகும். புதுவை அரசே, அறநிலையத் துறையே ஆகம விதிகளுக்கு உட்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற நடவடிக்கை எடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE