முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 2 முறை விரல் ரேகை பதியும் முறை அமல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமையுள்ள மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முறை விரல் ரேகை பதிவு செய்யும் முறை ஜன.1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமையுள்ள, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி வழங்கப்படுகிறது. அதேபோல் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசு சார்பில் முன்னுரிமையுள்ள, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ வீதம் கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜன.1-ம் தேதி முதல் முன்னுரிமையுள்ள மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் மத்திய அரசு அரிசி, மாநில அரசு அரிசி என தனித்தனியாகப் பிரித்து ரசீது பதிவு செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் மத்திய அரசு அரிசிக்கு தனியாகவும், மாநில அரசு அரிக்கு தனியாகவும் இருமுறை விரல் ரேகை பெற்று வருகின்றனர். இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மத்திய அரசு குறிப்பிட்ட அளவு அரிசிக்குப் பதிலாக நிதியாக வழங்குகிறது. இதனால் இருமுறை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE