சென்னை: "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “2016 நவம்பர் 8 இல் ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று ஆறு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் நேற்று (ஜன.2) தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி. நாகரத்தினம்மா பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற நான்கு நீதிபதிகள் பண மதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியதோடு, இந்த நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26(2)-ன்படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறியிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரிசை கொண்ட ரூபாய் நோட்டுகளை மட்டுமே பண மதிப்பிழப்பு செய்ய இந்த பிரிவு அனுமதி அளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1946 மற்றும் 1978 ஆம் ஆண்டில் ரூபாய் 1000, ரூபாய் 5000, ரூபாய் 10000 மதிப்புள்ள நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அந்த எண் வரிசையில் ஒரு சிறு பகுதி மட்டுமே புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. ஆனால், கடந்த 2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, புழக்கத்திலிருந்த 86 சதவிகிதம், அதாவது ரூபாய் 17 லட்சத்து 67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனையடுத்து 125 கோடி மக்கள் தொகைக்கு ரூபாய் 2 லட்சம் கோடி எஞ்சிய கரன்சி நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டன.
பண மதிப்பிழப்பை பிரதமர் மோடி அன்று அறிவித்தபோது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின்பற்றப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய பரிந்துரையின் பேரில்தான் மத்திய அரசு செயல்பட முடியும். ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு முடிவு செய்து ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்து அதன்மீது பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவசர அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முடிவெடுக்கப்பட்டபோது, மத்திய வாரியத்தில் 10-இல் 7 பதவிகள் காலியாக இருந்தன. மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு ரிசர்வ் வங்கி பணிந்திருக்கிறது.
» ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம்
» பயங்கரவாதத்தின் மையமாக இருக்கிறது பாகிஸ்தான்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கலில் விரிவான கலந்தாய்வு 8 மாதங்களாக நடந்ததாக கூறியிருக்கிறது. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8-க்கு முன்பு இரண்டு மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பிலிருந்தார். அவர் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார். அதற்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த டாக்டர் உர்ஜித் படேலும் அதே நிலைதான் எடுத்திருந்தார். அதனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியபடி விரிவான கலந்தாய்வு நடந்தது என்பது உண்மைக்குப் புறம்பான கருத்து என்பது அம்பலமாகியுள்ளது.
சாதாரணமாக ரிபோ ரேட் மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி இரண்டு நாள், மூன்று நாள் விவாதித்துத் தான் முடிவெடுக்கிறது. ஆனால், நாட்டில் புழக்கத்திலிருந்து 86 சதவிகித நோட்டுகளை நீக்குவது என்கிற முடிவை மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் முடிவெடுத்து தனது சுயாட்சி தன்மையைக் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டது. இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8 அன்று மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது ரூபாய் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. அதில் திரும்ப வந்தது ரூபாய் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி. திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 12 லட்சத்து 877 கோடி. ஆனால், இதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூபாய் 12,677 கோடி. இவ்வகையில் ரூபாய் 100 கோடி மட்டுமே அரசுக்குப் பலனாகக் கிடைத்திருக்கிறது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 99 சதவிகித ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வந்துவிட்டன. இதை கருப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த இருந்த கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு தான் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியாக செய்திருக்கிறது. பிரதமர் மோடி கூறியபடி கள்ளப் பணமோ, கருப்புப் பணமோ, பயங்கரவாத ஒழிப்பு என்ற எந்த நோக்கமும் நிறைவேறவில்லை.
அதற்கு மாறாக, 2015-16 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவிகிதத்திலிருந்து 2017-18 இல் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. 1.6 சதவிகித வீழ்ச்சியினால் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு ரூபாய் 2.25 லட்சம் கோடி. அது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதைத் தவிர வங்கிகள் மற்றும் ஏடிஎம்-இல் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 35 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான பேர் வேலை இழந்துள்ளனர்.
பண மதிப்பிழப்பின் போது அறிவிக்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறவில்லை என்ற பிறகு, இலக்குகளை மாற்றி இந்த நடவடிக்கையின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து மக்களிடையே பணப் புழக்கம் குறையும் என்று பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம் கருப்புப் பணம் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக கடந்த 2016 நவம்பர் 4 ஆம் தேதி நாட்டின் மொத்த ரூபாய் நோட்டு புழக்கம் ரூபாய் 17.74 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அது தற்போது டிசம்பர் 2022 இல் படிப்படியாக அதிகரித்து ரூபாய் நோட்டு புழக்கம் ரூபாய் 32.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அது கடந்த ஆறு ஆண்டுகளில் 83 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
எனவே, பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவுக்கும், மக்கள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகத் தான் அமைந்துவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசுக்குப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டாயா, இல்லையா என்பது குறித்து தான் தீர்ப்பு வழங்கியதே தவிர, இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்தோ, மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்தோ தீர்ப்பில் கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago