சென்னை: தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினர் சென்றுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
சென்னை, விருகம்பாக்கம், தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "கல்லூரிக்கு கனவுடன் செல்கிற மாணவ-மாணவிகளுக்கு ஒரு தந்தையாக, ஒரு சகோதரராக திமுக ஆட்சி விளங்குகிறது" என்று மேடையில் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, 129-வது வட்ட திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், தொல்லை கொடுத்த திமுகவினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
» தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்: ராமதாஸ்
» கடலூர் | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி
தி.மு.க.வினரின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. குற்றம் செய்வோரை விடுவித்து விடுவது என்பது குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதன்மூலம், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சீரழிந்து கொண்டு வருகின்ற சட்டம்-ஒழுங்கு மேலும் சீரழியக் கூடும். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை விடுவிப்பது என்பது பாலியல் குற்றத்திற்கு திமுக அரசு துணை போவதற்கு சமம். திமுக அரசின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டேயிருக்கின்ற இந்த நிலையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ள நிலையில், வெடிகுண்டு கலாச்சாரம் ஆரம்பித்துள்ள நிலையில், கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்டவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும், தீவிரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கியுள்ளது. மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் திமுகவைச் சேர்ந்தவர்களாலும், திமுக ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகின்ற சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுகவினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago