வனவிலங்குகளை வேட்டையாடும் வெடிகுண்டு கும்பல் கோவை வனப்பகுதியில் அதிகரித்துள்ளதாக அச்சம்

By கா.சு.வேலாயுதன்

அவுட்டுக்காய் எனப்படும் அபாயகரமான வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய கும்பல் பாலமலை பகுதியில் பிடிபட்டுள்ளனர்.

இதே நேரத்தில் இதே போன்ற அவுட்டுக்காய் வெடித்ததில் யானை ஒன்று தாடை கிழிந்து வனப்பகுதியில் உயிருக்குப் போராடி காட்டுக்குள் அலைந்து வருகிறது. அதையொட்டி கோவை மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை அருகே பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு ஒரு வேட்டுச்சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட விவசாயிகள் யாரோ பட்டாசு வெடித்ததாக கருதியுள்ளனர்.

அதே சமயம் இரண்டு பேர் மொபட்டில் காட்டுப்பன்றி ஒன்றை வைத்துக் கொண்டு வர அவர்களை வழிமறித்துப் பிடித்துள்ளனர். உடனே பிடிபட்டவர்களில் இருவரில் ஒருவர் ஏதோ ஒரு பொருளை பாக்கெட்டிலிருந்து எடுத்து தூரத்தில் இருந்த புதருக்குள் வீசியதைக் கண்டுள்ளனர். அதைப்பற்றி அவர்கள் மூச்சு விட மறுத்த நிலையில் புதரில் தேடியபோது காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காய் எனப்படும் 6 நாட்டு வெடிகுண்டுகள் புதருக்குள் கிடைத்துள்ளன. காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பல்களில் இருவரே தங்களிடம் பிடிபட்டவர்கள் என்பதை அறிந்த வனத்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த வெடிகுண்டுகளை வாங்கித்தரும் இருவர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அன்னூர் அருகே ஒரு கும்பல்தான் அவுட்டுக்காய் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்கிறது என்ற தகவல் கிடைக்க, இதில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் குருசாமி என்பவரை போலீஸில் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் குருசாமியை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி, அன்னூர் பகுதியில் அவுட்டுக்காய் தயாரிக்கும் கும்பல் தலைவனை தேடி வருகின்றனர்.

(கைது செய்யப்பட்ட பன்றி வேட்டை கும்பல்)

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இந்த கும்பல் பிடிபட்ட இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவனூர் கிராமத்து எல்லையில் ஒரு யானை தாடை தொங்கிய நிலையில் அடிபட்டு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறது. வலி தாளமுடியாமல் அங்கே பிளிறியபடியே அலைந்திருக்கிறது.

அதைப் பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்ட யானையைத் தேட அது அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அந்த யானை காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காயை மேய்ச்சலின் போது வாய் வைத்திருக்க வேண்டும். அதில்தான் அதன் தாடை கிழிந்து தொங்கியிருக்க வேண்டும்.

எனவே அதற்கு உடனே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுவிட்ட யானையைத் தேடும் பணியைத் தொடர்ந்ததோடு அது தண்ணீர் அருந்த வரும் இடங்களில் வாழைப்பழத்தில் (ஒரு வாழைத்தாரில்) மருந்துகளை கலந்து வைத்தனர். அதன் காயம் ஆறவும் வலி நிவாரண பெறவும் இதில் மாத்திரைகள் வைக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலையில் அந்த வாழைத்தாரையே காணோம். அந்த வாழைப்பழத்தாரை அந்த யானைதான் சாப்பிட்டதா? வேறு யானையோ, மிருகங்களோ சாப்பிட்டதா? என்று புரிபடாத நிலையில் மறுபடியும் அடிபட்ட யானை வேட்டை தொடர்கிறது. அதே நேரத்தில் போலீஸாரும் அவுட்டுக்காய் தயாரிப்பு கும்பல் தலைவனை தேடி வருகிறது.

( 4 பேர் கும்பலிடம் கைப்பற்றப்பட்ட அவுட்டுக்காய் வெடிகள் )

இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய வனத்துறையினர், 'சிலர் காட்டுப்பன்றிகளை அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு மூலம் கொன்று அதன் இறைச்சியை விற்று வருகின்றனர். வெடி மருந்தை சிறுகற்களோடு சேர்த்து இறுக கட்டி அதன் மீது மாட்டின் கொழுப்பை தடவி, தேவைப்பட்டால் மாட்டுக்கொழுப்பு, குடல் போன்றவற்றை அதன் மீது சுற்றி வெகு தொழில் நுட்பத்துடன் வனப்பகுதிகளில் இதை வைக்கிறார்கள். இதனை கடிக்கும் காட்டுப்பன்றி வெடி வெடித்து தலை சிதறி இறந்து விடுகிறது. அதனைக் கொண்டு சென்று இறைச்சியாக்கி கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்கிறார்கள்.

இது அன்னூர், சத்தியமங்கலம், பவானி சாகர் போன்ற பகுதிகளில் நிறைய நடக்கிறது. இந்த நாட்டு வெடிகுண்டை சாதாரணமாக உராய்வு ஏற்பட்டாலோ, கூடுதல் வெப்பம் படிந்தாலோ, சிறிய அழுத்தம் கிடைத்தாலோ கூட வெடித்துவிடும் தன்மை கொண்டவை. கடும் பலம் கொண்ட காட்டுப்பன்றிகளே தாடை கிழிந்து சாகிறது என்றால் மற்ற விலங்குகள் என்ன ஆகும்? அப்படித்தான் யானைகள் சில சமயங்களில் தீவனங்களை சாப்பிடும்போது, அதற்குள் சுருண்டிருக்கும் அவுட்டுக்காய் தெரியாமல் தும்பிக்கையால் சுற்றி வாயில் போட்டுவிடும்.

6 மாதங்களுக்கு முன்பு ஒரு குட்டியானை தடாகம் பகுதியில் தாடை கிழிந்து சுற்றித்திரிந்து இறந்தது. அதேபோல்தான் தற்போதும் ஒரு யானை அவுட்டுக்காய் வெடித்து இப்படி தாடை கிழிந்து சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவுட்டுக்காய் வெடி வைத்து கொல்லப்பட்ட காட்டுப்பன்றியுடன் இருந்த கும்பல் உலாவி வந்த பகுதிக்கும், தாடை கிழிந்த நிலையில் உலாவும் காட்டு யானைக்கும் இடையே 2 கிமீ தொலைவுதான்.

அவர்கள் வைத்த வெடிகுண்டினால் இந்த யானையின் தாடை கிழிந்ததா? அல்லது வேறு கும்பல் வைத்த வெடியால் அதற்கு தாடை கிழிந்ததா என்று தெரியவில்லை. இப்போதைக்கு அகப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். நிச்சயம் இந்த அவுட்டுக்காய் தயாரிக்கும் கும்பல் இதில் பிடிபடும்!' என்று தெரிவித்தனர்.

தாடை கிழிந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து பணியில் ஈடுபட்டு வரும் வேட்டைத் தடுப்புக்காவலர்களிடம் பேசியபோது, 'யானைக்கு ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும் 200 லிட்டர் தண்ணீரும் அவசியம் . வாய் பகுதி சிதறியுள்ள இந்த யானை நீர் அருந்த முடியாமலும், தீவனம் உண்ண முடியாமலும் மிகவும் பலவீனமடைந்துள்ளது. தவிர கடும் வலி காரணமாக ஓரிடத்தில் நில்லாமல் ஆக்ரோஷமாகவும் உள்ளது. அதனால் அதற்கு சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவர்களே திண்டாடி வருகிறார்கள்!' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்