அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் எஸ்.பி. ஆலோசனை

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதிகளை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேற்று பார்வையிட்டார். பின்னர் விழாக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு, 17-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கலந்து கொள்ளும். வாடிவாசல் பின்புறம் பல கி.மீ. தொலைவு காளைகள் நிறுத்தப்பட்டிருக்கும். வாடிவாசல் வழியே ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்படும்.

அதனால் காளைகளை அவிழ்த்து விடும் அளவுக்கு வாடிவாசல் பலமாக இருக்கிறதா?, அங்கு எத்தனை காளைகளை நிறுத்தலாம்?, ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய போதுமான இட வசதிகள் இருக்கிறதா?, ஜல்லிக்கட்டு காளைகள் மாடு பிடி வீரர்களிடம் இருந்து தப்பி ஒன்று சேரும் இடம் உட்படப் பல்வேறு அம்சங்களை மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேற்று பார்த்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது முதல் கட்ட ஆய்வு செய்துள்ளேன். நான்கு நாட்களில் மீண்டும் பார்வையிட்டு பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். அப்போது டிஎஸ்பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE