பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரை, திண்டுக்கல்லில் எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மதுரை: கரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப் பட்ட செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கக்கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் சங்கம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க மாவட்டத் தலைவர் டி.ராஜி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் லூ.சகாய டெய்சி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மு.தாமரைச்செல்வி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில இணைச் செயலாளர் சி.க.சுஜாதா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்என்று வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந் தாளுநர் சங்க புறநகர் மாவட்டச் செயலா ளர் அ.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.பரமசிவன்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.பிரேமலதா நன்றி கூறினர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கலா தலைமை வகித்தார்.

அரசு ஊழியர் சங்க தலைவர் முபாரக் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் பூர்ணிமா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துமாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE