சென்னை: "தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற புதிதாக மீண்டுமொரு குழு அமைத்துக் காலங்கடத்தாமல், அவர்களது வாழ்வாதார உரிமையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை நிறைவேற்றப் புதிதாகக் குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த காலங்களில் திமுக அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு வெற்றுக் குழுவினைப் போன்று இதுவும் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்தும் முயற்சியேயாகும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் 15000 ரூபாய் அளவுக்குக் குறைவான ஊதியம் பெறக்கூடிய அவல நிலை நிலவுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி பத்தாண்டிற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் முன்னெடுத்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் டிசம்பர் 31 அன்று கலந்துகொண்டு வாழ்வாதார உரிமை வெல்லக் குரல்கொடுத்தேன்.
இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 1 அன்று போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடும் நடவடிக்கையே அன்றி வேறில்லை. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் அரசு அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தயக்கம் ஏன்? ஆய்வுக்குழு அமைத்து ஆராய்ந்துதான் அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை அரசு கண்டறிய வேண்டுமா?
» வளசரவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடியில் 2 உயர் மட்ட பாலங்கள்: அரசாணை வெளியீடு
» மதுரை மாநகர காவல் ஆணையர், 2 துணை ஆணையர்கள் ஒரே நேரத்தில் மாற்றம் ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது ‘குழுக்களின் அரசாங்கம்’ என்று மக்களே விமர்சிக்கும் அளவுக்குப் பொருளாதார வல்லுநர் குழு, கரோனா கண்காணிப்புக் குழு, சமூகநீதி கண்காணிப்புக் குழு, நீட் தேர்வு ஆய்வுக் குழு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் குழு, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு, இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழு, இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க குழு, குடிசை மாற்று வாரிய கட்டிட ஆய்வுக் குழு, நகைக்கடன் தள்ளுபடி குழு, பல்கலைக்கழக முறைகேடுகளைக் கண்டறியக் குழு, என்று திமுக அரசு பொறுப்பேற்ற 20 மாதங்களில் ஏறத்தாழ 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக அரசால் அமைக்கப்பட்ட இத்தகைய குழுக்களால் நடந்த நன்மை என்ன? கிடைத்த தீர்வு என்ன?
தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவியின் மரணத்தின் உண்மையை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. அதனால் மாணவியின் மரணத்திற்கு கிடைத்த நீதி என்ன? 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க அமைக்கப்பட்ட குழுவால் அவர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன? நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவால் நீட் தேர்வினை ரத்து செய்ய முடிந்ததா? இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழுவால் தற்கொலைகளை தடுக்க முடிந்ததா?
புதுக்கோட்டை தீண்டாமைக் கொடுமை நிகழ்வில் சமூக நீதி கண்காணிப்பு குழு எடுத்த நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் குழு அமைத்த திமுக அரசு கொடநாடு கொலை, கொள்ளை நிகழ்வினை ஆய்வு செய்ய எந்த குழுவும் அமைக்காதது ஏன்? உண்மையில், புழு கூட நான்கு அடி நகரும். திமுக அரசு அமைத்த இத்தகைய குழுவில் எவ்வித நகர்வும் இருப்பதில்லை. இக்குழுக்களால் அரசின் வரிப்பணம் பலகோடி ரூபாய்கள் வீணாவதைத் தவிர ஆக்கபூர்வமாகச் செயல்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
ஆகவே, தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற புதிதாக மீண்டுமொரு குழு அமைத்துக் காலங்கடத்தாமல், அவர்களது வாழ்வாதார உரிமையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago