கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா காலத்தில் பணியாற்றி ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். 2019 ம் ஆண்டில் 2345 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 2323 பேர் பணியில் சேர்ந்தனர். 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 5736 பேரை பணிக்கு அழைத்ததில் 2366 பேர் பணியில் சேர்ந்தனர். அரசின் விகிதாச்சாரம் எதையும் பின்பற்றாமல் செவிலியர்களை பணிக்கு சேர்த்தது அதிமுக அரசு.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாமல், விகிதாச்சாரத்தை பின்பற்றாமல் பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நீதிமன்றங்களின் உத்தரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பொது சுகாதாரத்துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. மக்களை தேடி மருத்துவத்தில் இடைநிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இது போன்று சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்களை இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். பணி நீட்டிப்பு வழங்கப்படாதவர்களுக்கு காலிப்பணியிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது. 14 ஆயிரம் ஊதியம் வாங்கிய நிலையில், இது 18 ஆயிரம் ரூபாயாக உயர உள்ளது. பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை செவிலியர்கள் உணர வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE