தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி ஜன. 1-ம் தேதி முதல் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை திமுக அரசு முழுமையாக உணர்ந்து, அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, அகவிலைப்படி உயர்வை ஜன. 1-ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜன. 1-ம் தேதி முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர்.

இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவு ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலன் கருதி, இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ஏற்று, 2023-ம் ஆண்டு தொடக்கத்தை உவகையுடன் கொண்டாடி, மக்கள் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுவதால், கடந்த 6 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்குத் தரவேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சிகளும், அகவிலைப்படியை முன்தேதியிட்டு அறிவித்து, நிலுவையுடன் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், ஜன. 1-ம் தேதி முதல் அகவிலைப்படிஉயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த ஒரு வாரமாக சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், துறைச் செயலர், ஆணையர் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஆய்வுசெய்து, தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித் துறைச் செயலர் (செலவினம்) தலைமையில், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “எங்களது கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், முதல்வர் அறிவிப்பின் அடிப்படையிலும் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று நடைபெறும் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்