சேலம்: கரோனா அச்சுறுத்தலின்போது, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு நேற்று வந்த 30-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் வெளியேற்றினர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒன்று திரண்ட செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறியது: கரோனா தொற்றுப் பரவலின்போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3,200செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு மட்டுமே பணி என்றுகூறி எங்களை பணியமர்த்தி, கரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் தொடர்ந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தினர்.
கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், உயிர் அச்சத்துடன் பணியாற்றிய நிலையில், கரோனா அச்சுறுத்தல் முடிவுற்றதும் பணியில் இருந்து நீக்க முற்பட்டனர். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், எங்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எங்களுக்கு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக, நேற்றுடன் (டிசம்பர் 31-ம் தேதி) எங்களை பணி நீக்கம் செய்துவிட்டனர். 3,200 பேரை தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்தனர்.
அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யவில்லை. எங்களைப் போலவே, மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்த 950 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் தான் பணியாற்றி வந்தோம். கடந்த சில மாதங்களாக ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. நாங்கள் ஊதிய உயர்வு கோரவில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறோம்.
பணி நீக்கம் செய்த எங்களை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிகப் பணியில் வேண்டுமானால் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். கரோனா தொற்று அபாயம் தொடங்கி 3 ஆண்டுகளாக பணிபுரிந்த எங்களை மீண்டும், தற்காலிகப் பணிக்கு செல்ல வலியுறுத்துகின்றனர் என்றனர்.
இதனிடையே, சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வந்தபடி இருந்தனர். காலையில் 30 பேருடன் தொடங்கிய போராட்டம் மாலையில் 100-க்கும் மேற்பட்டோருடன் நடந்தது.
இதனிடையே, நேற்று இரவு 7 மணியளவில் சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யா தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து 103 செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago