மதுரை அருகே ஒற்றுமையை உணர்த்திய விழா - மாற்று மதத்தினருடன் பள்ளிவாசல் திறப்பு

By என். சன்னாசி

கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகிலுள்ளது மனப்பச்சேரி கிராமம். இக்கிராமத்தில் அனைத்து மதத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்கு சுமார் 400 ஆண்டு பழமையான பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இப்பள்ளிவாசலை கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்க, இஸ்லாமியர்கள் முடிவெடுத்தனர். இதன்படி, 3 ஆண்டுக்கு முன்பு பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணியை தொடங்கினர். கிராமத்த்திலுள்ள இந்துக்கள் தங்களால் முடிந்த பணம், பொருள் , உழைப்பு உதவிகளுடன் பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது

இந்நிலையில், புதிப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா அனைத்து மதத்தினரின் பங்கேற்புடன் நடந்தது. நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன், மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று பள்ளி வாசலை திறந்து வைத்தார்.

இது குறித்து அவ்வூரைச் சேர்ந்த அப்துல் ஜபார், அமானுல்லா, துரை ஆகியோர் கூறுகையில், ‘‘சுமார் ரூ. 1 கோடியில் புதுப்பித்த இப்பள்ளி வாசலின் உட்பகுதியில் இந்து கோயில்களை போன்று தூண்கள் அமைத்து இருப்பது சிறப்பு. மேலும், இக்கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் பள்ளிவாசலை தரிசனம் செய்த பின், வெளியூர் மற்றும் வேலைகளுக்கு செல்வதை கடைபிடித்து வருகின்றனர். பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்து கோயில் பூசாரி முதல் அனைத்து சமு தாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று விருந்தில் உணவருந்தினர். இந்த ஒற்றுமை தொடரும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE