சென்னையில் அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு சொத்து வரி விலக்கு: மாநகராட்சியின் புதிய விதிகள்
சென்னை: சென்னையில் உள்ள அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு சொத்து வரி விலக்கு அளிப்பது தொடர்பான விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
சென்னையில் அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு சொத்து வரி விலக்கு அளிப்பது தொடர்பான விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.இதன் விவரம்:
- சொத்து வரி விலக்கு கேட்டு விண்ணப்பம் அளிக்கும் மருத்துவமனைகள் உரிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகரிப்பட்ட மருத்துவமனைகளாக இருக்க வேண்டும்.
- மருத்துவமனைகள் பெறும் வருவாய்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் தளர்வுகள் பெற்று இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 85 சதவீத வருவாய் முழுவதும் அற நோக்கங்களுக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 75 சதவீத நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது ஏழை, எளிய மக்களால் செலுத்தக் கூடிய வகையிலான 75 சதவீத சலுகை கட்டணத்தில் மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.
- இந்த மருத்துவமனைகள் முழுவதும் அறச்சிந்தனையுடன் இயங்க வேண்டும். இது தொடர்பாக ஆணையர் அல்லது ஆணையரால் அனுமதிக்கப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை அடிப்படையில் உறுதி செய்யப்படும்.
- இந்த மருத்துவமனைகளின் தணிக்கை கணக்குகள் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
- மருத்துவமனைகள் அமைந்துள்ள சொத்தானது, அரசின் எந்த ஒரு சட்டம் அல்லது விதிகளை மீறுவதாக இருக்கக் கூடாது.
- ஆவணங்கள் அடிப்படையில் அல்லது ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமல்லாமல் மன்றத்தால் விலக்களிக்க தகுதியுடையவை என்று கருதப்படும் இனங்களுக்கு தகுந்த காரணங்களின் அடிப்படையில் அனுமதி கோரப்படும் பட்சத்தில், அதை மன்றம் பரிசீலனை செய்து முடிவு செய்யலாம்.
- மருத்துவனைகளுக்கு சொத்து வரி விலக்கு அளிப்பது தொடர்பாக இதன் விவரத்தை அரசிதழ் மற்றும் நாளிதழ்களில் வெளியிட வேண்டும்.
- வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் வரை பொதுமக்கள் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்.
- ஆட்சேபணைகளை பரிசீலனை செய்து, விலக்கு தொடர்பான கோரிக்கை மீது மன்றம் முடிவு எடுக்கும்.
- விலக்கு அளித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் வரி விலக்கு நடைமுறைக்கு வரும்.
- கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் சட்டப்படி சொத்துவரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.