பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மணல் சிற்பம்: முதல்வர் பார்வையிட்டார் 

By செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் “181 மகளிர் உதவி மையம்” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

இந்த 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30 ) பார்வையிட்டார். மேலும் “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!” என்ற பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE