நட்புமிகு சென்னை: சாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்த தனியாருக்கு அனுமதி

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: நட்புமிகு சென்னை மற்றும் நலமிகு சென்னை திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிப்பது என சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர்மிகு சென்னை, கலாசாரம் மிகு சென்னை உள்ளிட்ட திட்டங்கள் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நட்புமிகு சென்னை மற்றும் நலமிகு சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் சாலைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னையில் சாலைகள் மற்றும் மாநகராட்சி இடங்களில் நிகழ்வுகளை நடத்த விரும்புவர்கள் வட்டார துணை ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெற உள்ள நாளுக்கு 2 வாரங்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தின் மதிப்பு மற்றும் அளவை கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அனுமதி கிடைத்த நேரத்தில் மட்டும்தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மாநகராட்சியின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE