திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக குறித்து பேசப்பட்டது என்ன? - டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக மக்களுக்கு அவர்கள் யார் என்பதை புரிய வைக்கவும், மக்களிடம் பாஜக பரப்பிவரும் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது" என்று திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிச.28) காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: "இந்த இயக்கத்தின் கொள்கைகளை, தமிழர் வாழ்வியல் முறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை எப்படி முறைப்படுத்தி செய்ய வேண்டும். அதுதொடர்பாக மக்களிடம் எத்தகைய கருத்துகளைச் சொல்ல வேண்டும். எந்த வேகத்தோடு நாம் செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை கட்சியின் தலைவர் அணி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்" என்றார்.

கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அதைத்தாண்டி இயங்க வேண்டிய ஓர் இயக்கம் திமுக. இன்றைக்கு பாஜகவினரின் வருகைக்ககுப் பிறகு தமிழர்களின் வாழ்வைப் பாதுகாக்க, தமிழர்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க, பெரும்பணி ஆற்ற வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வெறும் தேர்தல் நோக்கிய பயணமாக மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கு அவர்கள் யார் என்பதை புரிய வைக்க, மக்களிடம் பாஜக பரப்பிவரும் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE