புதுச்சேரி பந்த் | அதிமுக மாநிலச் செயலர், முன்னாள் எம்எல்ஏக்கள் கைது; அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதம் - போலீஸ் குவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று (டிச.28) முழு அடைப்புப் போராட்டம் அறிவித்த அதிமுக மாநிலச் செயலர், முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுகவினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவரின் ஹோட்டல், பேருந்துகள் மற்றும் டெம்போ கண்ணாடிகளை கல்வீசி உடைத்தோரை போலீஸார் தேடிவருகின்றனர். நகரில் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெறும் என புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் காலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் பந்த் போராட்டத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் எனக்கூறி திமுக, வர்த்தக சபை, வணிகர்சங்க கூட்டமைப்பு, தொழில் வர்த்தக பேரவை ஆகியோர் இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

திமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் 6 எம்எல்ஏக்கள் போலீஸ் ஜஜி சந்திரனை சந்தித்து, கடைகளை திறக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் சிவசங்கர் எம்எல்ஏ தலைமையில், கடைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என மனு அளித்திருந்தார்.

தனி மாநில அந்தஸ்து மீட்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நேரு எம்எல்ஏ, வேறு தேதியில் போராட்டம் நடத்தினால் ஆதரவு தருவதாக அறிவித்திருந்தார். அதிமுகவின் மற்றொரு பிரிவு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர், பந்த் போராட்டம் இல்லை என்றும், உண்மையான அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படமாட்டார்கள் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதிரடிப்படை போலீஸார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 20க்கும்மேற்பட்ட போலீஸார் பாரதி வீதியில் உள்ள அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் வீட்டுக்கு சென்றனர். அங்கு அன்பழகனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாகக்கூறி கைது செய்தனர். அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் போலீஸுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல முன்னாள் எம்எல்ஏக்கள் நடராஜன், பாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது. புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களில் சில பஸ் நிலையம் வந்து சென்றது. பிற தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, படேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. உட்புற பகுதிகளில் இருந்த ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

புறநகரில் பிரதான வீதிகளில் இருந்த கடைகள் திறக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கியது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. கல்லூரி மாணவர் பஸ்கள் இயக்கப்பட்டது. தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைகள் இயங்கியது.

பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூடும் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் எதிர்க்கட்சித்தலைவர் சிவாவின் ஹோட்டல் கண்ணாடி, தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் டெம்போக்களின் கண்ணாடிகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன.

ஜஜி சந்திரனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகள் 60 பேர் வரை கைது செய்துள்ளோம். பேருந்துகள், டெம்போ உடைப்பு தொடர்பாக விசாரித்து வருகிறோம். சிசிடிவி ஆதாரம் உள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீஸார் உள்ளனர். பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE